குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)
மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை அருங்கரை நின்ற உப்பொய் சகடம் பெரும்பெய றலையவீந் தாங்கியவள் இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. |
5 |
- பரணர். |
நெஞ்சே! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பைச் செலுத்துகின்ற வண்டி பெரிய மழை பொழிந்ததனால் அழிந்ததுபோல இவளது கரிய பலவாகிய கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நாண் அழிந்து கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும் கள்ளை உண்டாற்போல் நீ ஒருமுறை விரும்பியதன் பின்னும் விருப்பத்தை அடைந்தாய்.
முடிபு: சகடம் வீந்தாங்கு இவள் கூந்தல் அணிகண்டு நறவுண்டாங்கு நீ வெய்துற்றனை.
கருத்து: நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 165. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, சகடம், நின்ற, கூந்தல், சங்க, எட்டுத்தொகை, றலையும்