குறுந்தொகை - 166. நெய்தல் - தோழி கூற்று
(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)
தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும் ஊரோ நன்றுமன் மரந்தை ஒருதனி வைகிற் புலம்பா கின்றே. |
|
- கூடலூர் கிழார். |
குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால் வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய ஊராகியமரந்தை தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின் வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.
முடிபு: மரந்தை நன்றுமன்; தனிவைகிற் புலம்பாகின்று.
கருத்து: தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 166. நெய்தல் - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தலைவனைப், மரந்தை, காரணமாகின்றது, சங்க, எட்டுத்தொகை, நன்றுமன்