குறுந்தொகை - 16. பாலை - தோழி கூற்று
(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
உள்ளார் கொல்லோ தோழி கள்வர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி தன்றுணை பயிரும் அங்காற் கள்ளியங் காடிறந் தாரே. |
5 |
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
தோழி! ஆறலை கள்வர் செப்பஞ் செய்யும் பொருட்டு இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய அழகிய அடியை உடைய கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள்வயிற் சென்ற தலைவர் நம்மை நினையாரோ?
முடிபு: தோழி, காடிறந்தோர் உள்ளார்கொல்?
கருத்து: தலைவர் விரைவில் வந்து விடுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 16. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, உடைய, குறுந்தொகை, கூற்று, கள்வர், பல்லியை, தலைவர், பெண், நம்மை, எட்டுத்தொகை, சங்க, சென்ற, பல்லி