குறுந்தொகை - 154. பாலை - தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)
யாங்கறிந் தனர்கொல் தோழி பாம்பின் உரிநிமிர்ந் தன்ன உருப்பவி ரமையத் திரைவேட் டெழுந்த சேவல் உள்ளிப் பொறிமயிர் எருத்திற் குறுநடைப் பேடை பொறிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத் |
5 |
தயங்க விருந்து புலம்பக் கூஉம் அருஞ்சுர வைப்பிற் கானம் பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே. |
|
- மதுரைச் சீத்தலைச் சாத்தனார். |
தோழி! பாம்பினது உரி மேலெழுந்தாற் போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில் இரையை விரும்பி மேலெழுந்து பறந்து சென்ற ஆண் பறவையை நினைந்து புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும் குறுக அடியிடும் நடையினையும் உடைய பெண்புறாவானது பொரிந்த அடியையுடைய கள்ளியினது வெடித்த காயையுடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமை தோன்றும்படி கூவுகின்ற கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தை கடந்து நெடுந்தூரத்தில் தங்குதலில் வன்மையையுடைய தலைவர் அவ்வன்மையை எவ்வாறு தெரிந்து கொண்டனர்?
முடிபு: தோழி, கானம் பிரிந்து உறைதல் வல்லுவோர் யாங்கு அறிந்தனர்?
கருத்து: தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 154. பாலை - தலைவி கூற்று, பிரிந்து, பாலை, இலக்கியங்கள், தலைவி, குறுந்தொகை, தோழி, கூற்று, தலைவர், கானம், எங்ஙனம், சென்ற, எட்டுத்தொகை, சங்க, நினைந்து