குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று
(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்”என்று கூறித் தலைவன் வருந்தியது.)
வங்காக் கடந்த செங்காற் பேடை எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது குழலிசைக் குரல் குறும்பல அகவும் குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது மறப்பருங் காதலி யொழிய |
5 |
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. | |
- தூங்கலோரியார். |
நெஞ்சே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த சிவந்த காலையுடைய பெண் பறவை புல்லூறென்னும் பறவை தம் மேல் நெருங்க இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக தம்முடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் வேய்ங் குழலினது இசையைப் போன்ற குரல்களை யுடையனவாய் குறிய பல ஒலிகளால் அழைக்கும் குன்றைப் பொருந்திய சிறிய வழிகள் கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல் மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க நான் செல்வேனென்று துணிவது இங்கே நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.
முடிபு: நெஞ்சே, சிறுநெறி அரிய என்னாது காதலியொழிய இறப்ப லென்பது இளமைக்கு முடிவு.
கருத்து: இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று , இலக்கியங்கள், தலைவன், தலைவியைப், பறவை, பாலை, பிரிந்து, கூற்று, குறுந்தொகை, இறப்ப, நெஞ்சே, இங்கே, என்னாது, அரிய, எட்டுத்தொகை, இளமைக்கு, சிறுநெறி, சங்க