குறுந்தொகை - 149. பாலை - தலைவி கூற்று
(தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூறத் தலைவி அவனுடன் செல்லுதலால் நாண் அகலுமென்று இரங்கிக் கூறியது.)
அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் |
5 |
காம நெரிதரக் கைந்நில் லாவே. | |
- வெள்ளி வீதியார். |
தோழி! நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது; இனிமேல் வெள்ளிய பூவையுடைய கரும்பினது உயர்ந்த மணலையுடைய சிறிய கரை இனிய நீர் நெருங்கி அடித்தலால் அழிந்து வீழ்ந்தாற்போல தடுக்கும் வரையில் தடுத்து காமம் மேன்மேலும் நெருக்க என்பால் நில்லாது போய்விடும்; அஃது இரங்கத் தக்கது.
முடிபு: நாண் நனி நீடுழந்தன்று; கைந்நில்லாது; அளிது.
கருத்து: யான் தலைவனுடன் செல்லுதலால் நாணழியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 149. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, செல்லுதலால், தலைவனுடன், நாண், சங்க, எட்டுத்தொகை, தோழி