குறுந்தொகை - 110. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, “இனி அவர் வரினும் வாராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து படுவேன்” என்று தலைவி கூறியது.)
வாரா ராயினும் வரினும் அவர்நமக்கு யாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பீலி ஒண்பொறிக் கருவிளை யாட்டி நுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த |
5 |
வண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று இன்னா தெறிதரும் வாடையொடு என்னா யினள்கொல் என்னா தோரே. |
|
- கிள்ளிமங்கலங்கிழார். |
தோழி! நீரிலுள்ள நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து புதலிலே உள்ள மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை அலைத்து நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள் உதிரும் படி குளிர்ச்சியையுடையதாகி இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால் எத்தன்மையினள் ஆனாளோ என்று நினைந்து கவலையுறாத தலைவர் வாராவிடினும் வந்தாலும் நமக்கு எத்தகைய உறவினராவர்? வருவதற்குள் இறந்து படுவேன்.
முடிபு: தோழி, என்னாயினள் கொல் என்னாதோர், வாராராயினும் வரினும் யாராகியர்?
கருத்து: தலைவர் வாராமையின் யான் இறந்துபடுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 110. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, முல்லை, வரினும், குறுந்தொகை, கருவிளை, தலைவர், என்னா, இறந்து, எட்டுத்தொகை, வாராவிடினும், சங்க