குறுந்தொகை - 11. பாலை - தலைவி கூற்று
(தலைமகனைப் பிரிந்திருக்கும் தலைவி, ‘‘நெஞ்சே, தலைவர் வாராமையின் உடம்பு மெலிந்தது; துயிலையும் ஒழிந்தேன்; துயர் மிகுதியால் அழுவேன்; இங்ஙனம் இங்கிருந்து துயருறுதலைக் காட்டிலும் அவர் இருக்கும் இடத்திற்குச் செல்லுதல் நலம்’’ என்று தோழி கேட்கும்படி நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்த் தனது துயர மிகுதியைப் புலப்படுத்தியது.)
கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும் பாடில கலிழும் கண்ணொடு புலம்பி ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது |
5 |
வல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. |
|
- மாமூலனார் |
எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளை உடல் மெலிவினால் நெகிழா நிற்ப நாள்தொறும் இமை பொருந்துதல்இல்லாதனவாகிக் கலங்கியழும் கண்ணோடு தனித்து வருந்தி இப்படி இங்கே தங்குதலில் இருந்து தப்புவேமாக; தலைவர் இருக்கும் இடத்திற்கு செல்லஇப்பொழுது எழுவாயாக; முன்னே உள்ளதாகிய கஞ்சங் குல்லையாலாகிய கண்ணியை அணிந்த வடுகருக்குரிய இடத்தினதாகிய பல வேலையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள மொழி வேறுபட்ட நாட்டில் உள்ளவரேனும் அவருடைய நாட்டினிடத்து செல்லுதலை எண்ணினேன்.
முடிபு: நெஞ்சே, உய்குவம்; எழு நாட்டு வழிபடல் சூழ்ந்திசின்.
கருத்து: தலைவரைப் பிரிந்து தனித்திருத்தலை இனி ஆற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 11. பாலை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, பாலை, வழிபடல், சூழ்ந்திசின், நெஞ்சே, கட்டி, தலைவர், எட்டுத்தொகை, சங்க, இருக்கும், உய்குவம்