குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் கேண்மை வரைவினால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.)
புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை |
5 |
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே. | |
- நக்கீரர். |
தோழி! குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை தெரியாமல் உண்ட மயில் தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு நீர் மிக்க கண்களோடு நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.
முடிபு: மலைநாடன் கேண்மை நினைப்பாகின்றது.
கருத்து: தலைவன் வரையாமையின் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 105. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கேண்மை, கூற்று, நினைந்து, எட்டுத்தொகை, சங்க, தலைவன்