குறுந்தொகை - 103. நெய்தல் - தலைவி கூற்று
(கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வாராமையினால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவாற்றாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.)
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் கவரிதழ் அன்ன தூவிச் செவ்வாய் இரைதேர் நாரைக் கெவ்வ மாகத் தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் வாரார் போல்வர்நங் காதலர் |
5 |
வாழேன் போல்வல் தோழி யானே. | |
- வாயிலான் தேவனார். |
தோழி! மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேர்கின்ற முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும் செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவுகின்ற நீர்த்துளி களையுடைய பிரிந்தார் துயர்கூர்தற்குக் காரணமாகிய வாடைக்காற்றையுடைய கூதிர்க் காலத்திலும் பிரிந்து சென்ற நம்முடைய தலைவர் வருவாரல்லர்; யான் வாழ்வேனல்லேன்.
முடிபு: தோழி, நம் காதலர் வாடைக்காலத்தும் வாரார்; யான் வாழேன்.
கருத்து: தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 103. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, யான், தோழி, குறுந்தொகை, கூற்று, நெய்தல், தலைவர், வாழேன், துன்பம், காலத்திலும், எட்டுத்தொகை, சங்க, வாரார், காதலர்