குறுந்தொகை - 102. நெய்தல் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கவன்றதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)
உள்ளின் உள்ளம் வேமே உள்ளா திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி வான்றோய் வற்றே காமம் சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே. |
|
- அவ்வையார். |
தலைவரை நினைந்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; நினையாமல் இருப்பேமாயின் அங்ஙனம் இருத்தல் எமது ஆற்றலளவிற்கு உட் பட்டதன்று; காமநோயோ எம்மை வருந்தச் செய்து வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது; எம்மால் மருவப் பட்ட தலைவர் சால்புடை யாரல்லர்.
முடிபு: உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் எம் அளவைத்தன்று; காமம் வான்தோய்வற்று; மரீஇயோர் சான்றோரல்லர்.
கருத்து: தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 102. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, உள்ளம், குறுந்தொகை, நெய்தல், காமம், தலைவர், உள்ளின், நினைந்து, எட்டுத்தொகை, சங்க, சொற்படி