குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தலைவியோடு இன்புற்று இல்லறம் நடத்தும் தலைவன் அத் தலைவியினால் வரும் இன்பம் எப்பொருளினும் சிறப்புடையதென்று பாங்காயினார் கேட்பக் கூறியது.)
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குற் குறுமகள் |
5 |
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே. | |
- பரூஉ மோவாய்ப் பதுமனார். |
விரிந்த அலையையுடைய பெரிய கடல் வளைந்த பூவுலக இன்பமும் பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும் ஆகிய இரண்டும் தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும் பொன்னைப் போன்ற நிறத்தையும் மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய தலைவியினது தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளிற்பெறும் இன்பத்தோடு ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும் எமக்கு அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.
முடிபு: எமக்கு, குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு, கடல் வளைஇய உலகமும் புத்தேணாடும் ஆகிய இரண்டும் தூக்கிற் சீர் சாலா.
கருத்து: தலைவி பெறுதற்கரிய சிறப்பினள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், இரண்டும், குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பெறுதற்கரிய, இன்பமும், தோள், எமக்கு, கடல், ஆகிய, உலகமும், எட்டுத்தொகை, சங்க, வளைஇய, தூக்கிற், குறுமகள்