வேனிற் காதை - சிலப்பதிகாரம்
5.கடிதம் அனுப்புதல்
மன்னுயி ரெல்லாம் மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும் |
60 |
தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்றிஃ தறிந்தீ மின்னென எண்ணெண் கலையும் இசைந்துடன் போகப் பண்ணுந் திறனும் புறங்கூறு நாவின் |
65 |
தளைவா யவிழ்ந்த தனிப்படு காமத்து விளையா மழலையின் விரித்துரை எழுதிப் பசந்த மேனியள் படருறு மாலையின் வசந்த மாலையை வருகெனக் கூஉய்த் தூமலர் மாலையிற் றுணிபொரு ளெல்லாங் |
70 |
கோவலற் களித்துக் கொணர்க ஈங்கென மாலை வாங்கிய வேலரி நெடுங்கண் கூல மறுகிற் கோவலற் களிப்பத் |
“உலகிலுள்ள எல்லா உயிர்களையும் அவர்கள் மனம் விரும்பும் துணையோடு சேர்த்து வைக்க,இனிய இளவேனில் இளவரசன் மன்மதன் வந்தான்.அவன் அரசனைப்போல் எதையும் நெறிப்படச்செய்பவன் அல்ல.அந்திப் பொழுதாகிய அவ்வேளையிலே,அவனுக்குத் துணையாய் யானையின் அரிய பிடரியில் ஏறித் திங்கள் செல்வனும் வானிலே வந்து தோன்றினான்.அவனும் நடுநிலைமை உடையவன் அல்ல.
தம்முள் கலந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,பிரிந்து சென்றோர் தம் துணையினை மறந்து வாராது போயினும்,நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு அவர்களைத் தாக்கி நிற்பான் அந்த மன்மதன்!இதுவும் நீங்கள் அறிந்த ஒன்று தான்,இதில் புதுமை இல்லை.இதனைத் தாங்கள் அறிந்து,இங்கு வந்து அருள் செய்யுங்கள்” என்று வேண்டி எழுதினாள் மாதவி.
தான் பயின்ற அறுபத்து நான்கு கலைகளும் தொடர்ந்து தன்னைவிட்டு அகன்று போய்விட,அவற்றின் பண்ணும்,திறனும் இவள் நாவிற்கு ஒவ்வாமல் நிற்க,கட்டவிழ்ந்த ஆசையில் மழலை மொழிகள் பலவும் சொல்லிக் கொண்டே மடல் எழுதினாள்.பசலை படர்ந்த மேனியளான மாதவி,கோவலன் நினைவு மிகுந்து துன்பம் வருத்தும்,அம் மாலைக் காலத்தில்,தன் தோழியான வசந்தமாலையை,வருமாறு அழைத்தாள்.
வந்த வசந்தமாலையிடம், “தூய மலர்மாலை போன்ற இக்கடிதத்தில் நான் எழுதியவற்றின் பொருள் அனைத்தும் கோவலனுக்குப் புரியுமாறு அளித்து,அவரை என்னிடம் அழைத்து வருவாயாக”,என்று ஆணையிட்டாள்.
மாதவி கொடுத்த மாலையை வாங்கிய,குருதிக்கறை படிந்த வேல்முனை போன்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,புகாரின் கூலக்கடை வீதியில் இருந்த கோவலனைக் கண்டு,அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]