வேனிற் காதை - சிலப்பதிகாரம்
3.மாதவி மயங்கினாள்
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி இடக்கை நால்விரல் மாடகந் தழீஇச் செம்பகை யார்ப்பே கூடம் அதிர்வே வெம்பகை நீக்கும் விரகுளி யறிந்து |
30 |
பிழையா மரபின் ஈரேழ் கோவையை உழைமுதற் கைக்கிளை இறுவாய் கட்டி இணைகிளை பகைநட் பென்றிந் நான்கின் இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக் குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் |
35 |
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும் உழைமுத லாகவும் உழையீ றாகவும் குரல்முத லாகவுங் குரலீ றாகவும் அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் |
40 |
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித் திறத்து வழிப்படூஉந் தெள்ளிசைக் கரணத்துப் புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச் |
மாதவி,வலக்கையினைப் பதாகையாக(பெருவிரல் வளைத்து,மற்ற விரல்களை நிமிர்த்தி) யாழின் கோட்டின் மீது வைத்து,கெட்டியாகப் பிடித்தாள்.இடக்கையின் நான்கு விரல்களால் மாடகம் என்னும் நரம்பினை இசைக்கும் கருவியைத் தழுவினாள்.செம்பகை,ஆர்ப்பு,அதிர்வு,கோடம் என்னும் பகை நரம்புகள் நான்கும் புகுந்துவிடாமல் நீக்கும் முறையறிந்து வாசித்தாள்.
பிழையில்லாத மரபு சார்ந்த ஈரேழ் கோவையாய் அமைந்திருந்த அந்தச் சகோடயாழை,உழை நரம்பு முதலாகவும் கைக்கிளை நரம்பு இறுதியாகவும் கட்டினாள்.இணை,கிளை,பகை,நட்பு என்னும் நான்கு நரம்புகளின் வழியே இசை கூடும் சரியான நிலையைப் பொருந்த அமையுமாறு நோக்கினாள்.குரல்,இளி என்னும் இரு நரம்புகளின் இசை ஒத்திருப்பதை இசைத்து,தன் செவியால் அளந்தே அறிந்திட்டாள்.
இப்படி அளந்ததோடு,இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்,ஐந்தாம் நரம்பான இளியைக் குரலாய் நிறுத்தி ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.
உழை குரலாகவும்;உழை தாரமாகவும்;குரல் குரலாகவும்;குரல் தாரமாகவும்,அகநிலை,புறநிலை,அருகியல்,பெருகியல் எனப்படும் மருதத்தின் நால்வகைச் சாதிப் பண்களையும் அழகுற இசைத்தாள்.வலிவு,மெலிவு,சமம் எனும் மூவகை இயக்கமும் முறையாகப் பாடினாள்.அதன் பின்பு அவற்றின் இனத்தைச் சார்ந்த திறப்பண்புகளுடன் பாடும் தருணத்தில்,கோவலன் தன்னைப் பிரிந்தது நினைவுக்கு வந்தது.இதனால் பூங்கொடி போன்ற மாதவி சற்றே மயங்கியதன் விளைவாக,எடுத்துப் பாடிய பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]