வேனிற் காதை - சிலப்பதிகாரம்

8. வேனில் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
இளவேனிற் காலத்தில்,கோவலன் பிரிவால் மாதவி வாடினாள்.கோவலன் அவள் அனுப்பியத் தூதினையும் மறுத்தான்.அதனால் மாதவி மனம் மேலும் துயரத்தால் துடித்தது.
1.தென்றல் வருகை
நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடா ருறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும் அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் |
5 |
மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இன்னிள வேனில் வந்தன னிவணென வளங்கெழு பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன் இசைத்தன னாதலின் மகர வெல்கொடி மைந்தன் சேனை |
10 |
புகரறு கோலங் கொள்ளுமென் பதுபோற் கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற |
‘திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய வேங்கடமலையையும்,தெற்கில் குமரிக்கடலையும்’ எல்லையாகப் பெற்றது தமிழ்நாடு.குளிரிந்த நீர் வளம்செறிந்த இந்த நல்ல தமிழகத்திலே,மாடமாளிகைகள் நிறைந்த ஊரான மதுரை,பெருமையில் சிறந்த ஊரான உறையூர்,ஆரவாரம் நிறைந்த நகரான வஞ்சிமா நகர்,ஒலிக்கின்ற கடல் துறையை உடைய புகார் என்னும் நான்கு பெரிய நகரங்களில் ஆட்சி செய்தவன்,புகழும் சிறப்புமுடைய மன்மதன் ஆவான்.அவனுக்கு மகிழ்ச்சி தரும் துணையாக விளங்குவது இனிய இளவேனில்.அந்த இளவேனிற் புகார் நகருக்கு வந்துவிட்ட செய்தியை,வளத்தில் சிறந்த பொதிகை மலையில்,அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்னும் தூதன் வந்து உரைத்தான்.ஆதலால்,“வெற்றியில் சிறந்த மீன்கொடியினை உடைய மன்மதனின் படையிலுள்ள மகளிர் அனைவரும் நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்” என்று பொருள் சொல்லும் விதமாக,பூங்கொடிகள் நிறைந்த சோலை என்னும் காமன் பாசறையிலிருக்கின்ற,குயிலோன் என்னும் படையைச் சேர்ந்த ஒருவன்,காமதேவனின் கட்டளையை கூறி அறிவித்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]