கானல் வரி - சிலப்பதிகாரம்
9.ஒவ்வாய் இவளை !
(தலைவியுடன் சேர்ந்த பின் பிரியும் தலைவன்,அவள் சிறப்பை தனக்குள் சொல்லுவதுப் போல அமைந்துள்ளது இப்பாடல்.)
வேறு
பவள உலக்கை கையாற் பற்றித் தவள முத்தங் குறுவாள் செங்கண் தவள முத்தங் குறுவாள் செங்கண் குவளை யல்ல கொடிய கொடிய. |
20 |
புன்னை நீழற் புலவுத் திரைவாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் கொன்னே வெய்ய கூற்றங் கூற்றம். |
21 |
கள்வாய் நீலங் கையி னேந்திப் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் வெள்வேல் அல்ல வெய்ய வெய்ய. |
22 |
சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய் சேரல் மடவன்னம் சேரல் நடைஒவ்வாய் ஊர்திரைநீர் வேலி உழக்கித் திரிவாள்பின் சேரல் மடவன்னம் சேரல் நடையொவ்வாய். |
23 |
பவளத்தால் செய்த உலக்கையைக் கையால் பிடித்துக் கொண்டு,வெண்மையான முத்துக்களைக் தாக்குகிறாளே!
அவளுடைய செவ்வரி படர்ந்த கண்கள்,குவளை மலர்களோ? அல்ல! அல்ல! குவளை மலர்கள் அல்ல!அவை மிகவும் கொடியவை!
புன்னை மரத்தின் நிழலிலே,புலால் நாறும் அலைதனில்,அன்னப் பறவை நடப்பது போல அசைந்து அசைந்து நடக்கிறாளே!
அவளின் சிவந்த கண்கள்,கண்கள் அல்ல!மிகவும் கொடியக் கூற்றமே!
தேனைத் தன் வாயிலே கொண்ட நீல மலரைக் கையில் ஏந்தி,மீன் வற்றலைத் தின்ன வரும் பறவைகளை ஓட்டுகிறாளே!
அவளின் சிவந்த கண்கள்,இரத்தக் கறை பற்றாத வேல்களோ?அல்ல! அல்ல!அவை அதனினும் கொடிது !கொடிது !
மென்மையான அன்னமே!நீ அவளுடன் சேராதே! அலைகள் சூழும் கடலினை வேலியாக உடைய உலகை எல்லாம்,தனது அழகால் கலக்கித் திரிகின்றவள் அவள் !அவள் நடைக்கு உன் நடை ஒப்பாகாது!அதனால் அவளோடு நீ நடந்திடாதே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]