கானல் வரி - சிலப்பதிகாரம்

8.துன்பம் கண்டாய்
(தலைவன் தன் ஆற்றாமையை தலைவியிடம் கூறுகிறான்.)
வேறு
(திணை நிலைவரி)
(திணை நிலைவரி)
கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகும் இடைஇழவல் கண்டாய். |
17 |
கொடுங்கண் வலையால் உயிர்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்கொல்வை மன்நீயும் வடங்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்பிழவல் கண்டாய். |
18 |
ஓடுந் திமில்கொண் டுயிர்கொல்வர் நின்ஐயர் கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும் பீடும் பிறரெவ்வம் பாராய் முலைசுமந்து வாடுஞ் சிறுமென் மருங்கிழவல் கண்டாய். |
19 |
உன் மூத்தோராகிய தமையன்மார்,கடலுக்குள் சென்று அங்குள்ள உயிரினங்களைக் கொன்று வாழ்பவர்!நீயோ என் உடலுக்குள் புகுந்து என் உயிரைக் கொன்று வாழ்கின்றாய்!வலிமையான கச்சையினுள் இருந்தும் அடங்காது என்னை வாட்டும் உன் விருப்பத்தக்க மார்புகளின் சுமையால் வருந்தித் தளர்கிறது உன் இடை.அவ்விடையை நீ இழந்து விடாதே!
கொடுமையான கண்களையுடைய வலையால் உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் உன் தந்தை.நீயோ உன் நெடுங்கண் வலையால் என் உயிரைக் கொல்கிறாய்!முத்துவடம் தாங்கிநிற்கும் உன் மார்புகளின் சுமையால் மழைமேகத்தின் மின்னலைப் போல அசைந்து தளர்கின்றது உன் இடை.அதை நீ இழந்திடாதே!
கடலில் ஓடுகின்ற படகினைக் கொண்டு,உயிர்களைக் கொன்று வாழ்பவர் உன் தமையன்மார்.நீயும் உன் வளைந்த புருவம்கொண்டு என்னை கொல்வாயோ!உன் பெருமையையும்,உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ எண்ணி பார்!உன் மார்புகளின் பாரம் சுமந்து வாடுகிறது உன் சிறிய மெல்லிடை.அதனை நீ இழந்து விடாதே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]