கானல் வரி - சிலப்பதிகாரம்

7.என்னைத் துன்புறச் செய்தவை!
(தலைவன் தன் தோழனிடம்,தனக்கு தோன்றியதை கூறுவதுப் போல அமைந்துள்ளது இப்பாடல்.)
வேறு
(முரிவரி)
(முரிவரி)
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே. |
14 |
திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே. |
15 |
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறுமலரே தனியவள் திரியிடமே முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இணைமுலையே எனையிடர் செய்தவையே. |
16 |
தோழனே!பூம்பொழில் தருகின்ற நறுமணமுடைய மலர்,அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்,அதில் நின்ற தலைவியின் பழுதில்லாத இனிமை பேச்சு,பருத்த இளமையான அழகிய மார்புகள்,முழுமதி போன்ற முகம்,வளைந்த புருவமாகிய இரண்டு வில்,எழுத இயலாத மின்னல் போன்ற இடை,இவை அனைத்தும் என்னைத் துன்புறச் செய்தன!
தோழனே!அலைகள் பரந்த நீர்த்துறை,அழகிய மணல் நிறைந்த கடற்கரை,மணம் வீசும் மலர்கள்,மரங்கள் நெருங்கிய கானற்சோலை,அங்கே நின்றிருந்த தலைவியின் மணம் பரந்த சுருண்ட கூந்தல்,மதி போன்ற அவளின் அழகு முகம்,இரு கயல் போன்ற இணைந்த விழிகள்,இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தவை!
தோழனே!சங்குகள் வளர்கின்ற துறை,மணம் பரந்த கானற்சோலை,கட்டவிழ்ந்த நறுமண மலர்,அவள் தனித்து உலாவுகின்ற இடம்,முளை போல வளரும் பல்வரிசை,முழுமதி போன்ற முகம்,இளமைப் பருவம் கொண்ட அவளின் இணைந்த மார்புகள்,இவை அனைத்தும் என்னைத் துன்புறச் செய்தன!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]