கானல் வரி - சிலப்பதிகாரம்

6.கூற்றம் காணீர்
(கோவலன் யாழிசையுடன் பாடும் இப்பாடல்,தனியாக எதிரே வந்த ஒரு பெண்ணை நோக்கி தலைவன் கூறுவதுப் போல அமைந்துள்ளது)
வேறு
(நிலைவரி)
(நிலைவரி)
கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணீர் திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அங்கண்ஏர் வானத் தரவஞ்சி வாழ்வதுவே. |
11 |
எறிவளைக ளார்ப்ப இருமருங்கு மோடுங் கறைகெழுகயற் கண்ணோ கடுங்கூற்றங் காணீர் கடுங்கூற்றங் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடங்கெழு மென்சாயல் மகளா யதுவே. |
12 |
புலவுமீன் வெள்உணங்கற் புள்ளோப்பிக் கண்டார்க்கு அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர் அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானற் பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண் டதுவே. |
13 |
கண்ணாகக் கயலையும்,புருவமாக வில்லையும்,கூந்தலாகக் கார்மேகத்தையும் வரைந்து,இவற்றுடன் எதிரே வந்த என்னைக் காமத்தால் வாட்டுகின்ற கொடுந்தொழிலையும் எழுதி வைத்துள்ள இவள் முகம் திங்கள் தானா?பாருங்கள்!
அழகு படர்ந்த வானத்தில் இருந்தால் பாம்புகள் வந்து தன்னை விழுங்கிவிடும் என்று பயந்து,மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு வாழ்க்கை நடத்திவரும் பரதவர் வாழும் சிற்றூரில் திங்கள் வந்து வாழ்கிறதோ?
கரையில் அலைகள் எறியும் சங்குகளின் முழக்கத்துக்கு அஞ்சி,இருபக்கமும் மிரள ஓடும் குருதிக் கறை உடைய,வேல்போன்ற கண்களை உடையவள்,கொடிய கூற்றமா எனப் பாருங்கள்!
கடலை நம்பி வாழும் இந்தச் சிற்றூரில்,அழகான மென்மையான பெணின் சாயலில் அந்தக் கூற்றம் தான் வந்துள்ளதோ!
புலால் நாற்றமுடைய மீனின் வெள்ளிய வற்றலைக் கொத்தவரும் பறவைகளை விரட்டி,தன்னைக் காண்போரை எல்லாம் மனம் தடுமாறச் செய்து,காமநோய்க்கு வசப்படுத்தி,வருத்தி நிற்கும் அணங்கு இவள் தானா ?பாருங்கள் !
அடும்ப மலர்கள் அடர்ந்து விளங்கும் குளிர்ந்த கானலில்,செறிந்த மெல்லிய கூந்தலுடன்,பெண் வடிவம் கொண்டு,ஓர் அணங்கு வந்துள்ளதோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]