கானல் வரி - சிலப்பதிகாரம்
22.மாலையே நீ வாழ்க !
வேறு
(முகம் இல் வரி)
(முகம் இல் வரி)
நுளையர் விளரி நொடிதருந்தீம் பாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை இளிகிளையிற் கொள்ள இறுத்தாய்மன் நீயேல் கொளைவல்லாய் என்னாவி கொள்வாழி மாலை. |
48 |
பிரிந்தார் பரிந்துரைத்த பேரருளின் நீழல் இருந்தேங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை உயிர்ப்புறத்தாய் நீயாகில் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோ டென்னாதி மாலை. |
49 |
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை மாலைநீ யாயின் மணந்தார் அவராயின் ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. |
50 |
மாலைப் பொழுதே,நெய்தல் நில மக்களின் ‘விளரிபாலை’ என்னும் பாலைப்பண்ணை நான் பாடி யாழ் மீட்டும்போது,மயக்கத்தால் இளி நரம்பை வருடுவதற்குப் பதிலாகக் கைக்கிளை என்னும் நரம்பைத் தடவுமாறுச் செய்ய,நீ என்னிடம் வந்து தங்கினாய்.இவ்வாறு செய்யவல்ல நீ,என் உயிரையும் கொள்ளைக் கொண்டு சென்று வாழ்வாயாக!
என்னைப் பிரிந்து சென்ற காதலர்,முன்னர் என்மேல் பாசத்துடன் கூறிய வார்த்தைகளை எண்ணி,அவை தருகின்ற நிழலில் ஏங்கி தனித்து வாழ்கிறேன்.இவ்வாறு வாழ்பவரின் உயிரைச் சூழ்ந்து அவர்களுக்கு வருத்தம் தருகிறாய் மாலைப் பொழுதே!என் உயிரைப் பறிக்கச் சூழ்ந்தாயோ!இவ்வாறு என்னைத் துன்புறுத்தும் நீ,கோட்டைக்குள்ளே வலிமையற்ற வேந்தனின் மதிலின் வெளியே சூழ்ந்து நிற்கும் பகை வேந்தனுடன் என்ன உறவு உடையாயோ!
துன்பம் தரும் காமநோயோ மிகுதியாகின்றது.பகல் செய்யும் கதிரவன் மேற்குத் திசையிலே சென்று மறைந்து விட்டான்.உலகெல்லாம் கண்மூடித் துயில்கிறது,மயக்கத்தையுடைய மாலைப்பொழுதே!நீயும் வந்தாய்.மாலையும் நீயானால்,என்னோடு முன்னர் கூடி இன்று பிரிந்து வாழும் அவரானால்,உலகம் இனி துயரால் வாடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]