கானல் வரி - சிலப்பதிகாரம்
11.வாழி காவேரி!
(மாதவி காவேரி ஆற்றை வாழ்த்தி பாடத் தொடங்குகிறாள்.)
வேறு
(ஆற்று வரி)
(ஆற்று வரி)
மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய்வாழி காவேரி கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன் திருந்துசெங்கோல் வளையாமை அறிந்தேன்வாழி காவேரி. |
25 |
பூவர்சோலை மயிலாலப் புரிந்துகுயில்கள் இசைபாடக் காமர்மாலை அருகசைய நடந்தாய்வாழி காவேரி காமர்மாலை அருகசைய நடந்தவெல்லாம் நின்கணவன் நாமவேலின் திறங்கண்டே அறிந்தேன்வாழி காவேரி. |
26 |
வாழியவன்றன் வளநாடு மகவாய்வளர்க்குந் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி. |
27 |
இருபக்கத்திலும் வண்டுகள் ஆர்ப்பரிக்க,அழகியப் பூக்களால் செய்த ஆடையைப் அணிந்துக் கொண்டு,உன்னில் துள்ளுகின்ற கரிய கயல் மீன்களை உன் கண்களாகக் கொண்டு,நீ அசைந்து நடந்தாய்!காவிரியே, நீ வாழ்க!
இப்படி நீ அசைந்தசைந்து நடந்திடக் காரணம்,உன் கணவனான சோழமன்னன் கையிலுள்ள வளையாத திருந்திய செங்கோலே,என்பதை நானும் அறிந்து கொண்டேன்.காவிரியே, நீ வாழ்க!
பூக்கள் அடர்ந்த சோலையில்,மயில்கள் நாட்டியம் ஆடவும்,குயில்கள் விரும்பி இசை பாடவும்,சூடிய அழகிய மாலைகள் அருகில் அசையவும்,இவற்றின்னுள்ளே புகுந்து நீ நடந்தாய்.காவேரியே நீ வாழ்க!
இவ்வாறு நீ செல்லக் காரணம் உன் கணவன் சோழமன்னனின் பகைவர்க்கு அச்சம் தரும் வேலின் ஆற்றலை கண்டேதான் என்பதை நானும் அறிந்தேன்.காவேரியே, நீ வாழ்க!
உன் கணவனது வளமையான நாடு வாழ்க!
அதனை உன் குழந்தைப் போல,காத்து வளர்க்கும் தாயாகி,காலம் தோறும் தவறாது உதவி செய்கிறாய்!அதனால் காவேரியே! நீ வாழ்க!
அங்ஙனம் நீ காக்கக் காரணம்,நாடு காத்து ஓம்புகின்ற ஆணைச் சக்க்ரம் ஏந்தி,நடுநிலையோடு ஆட்சி புரிய விரும்பும் உன் கணவன் சோழ மன்னனது அருளேயாகும்;
அதனால் காவேரியே! நீ வாழ்க!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]