கானல் வரி - சிலப்பதிகாரம்

7. கானல் வரி
கானல் வரி என்பது கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப்பாடல்களாகும்.கடற்கரை வந்த கோவலனும்,மாதவியும் யாழிசையுடன் சேர்த்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர்.இறுதியில்,கோவலன் மனம் மாறி,மாதவியை விட்டு பிரிகிறான்
1.கட்டுரை
(வசந்தமாலையிடம் இருந்த யாழை,மாதவி தொழுது வாங்கி,சரி செய்து,கோவலனிடம் நீட்டினாள்.)
சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடு மாணியு நரம்புமென்று இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கிப் பண்ணல் பரிவட்டணை யாராய்தல் தைவரல் |
5 |
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசையெழீ இப் பண்வகையாற் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்கள் |
10 |
பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருட னுருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் |
15 |
பட்டவகைதன் செவியினோர்த்து ஏவலன்பின் பாணியாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன். |
20 |
வசந்தமாலை கையிலிருந்த யாழ்,சித்திரங்கள் வரைந்த உறையினுள்ளே வைக்கப்பட்டிருந்தது.அதன் அழகிய கோடுகளில் பூக்கள் சூட்டப்பட்டிருந்தன.
மைதீட்டிய பெரிய கண்களையுடைய மணமகள் ஒருத்தியின் ஒப்பனைக் கோலத்தைப் போலப் புனைந்த அழகினை உடையது அந்த யாழ்!
பத்தர்,கோடு,ஆணி,நரம்பு முதலான யாழ் உறுப்புகளிலே,எவ்விதக் குற்றமும் குறையும் இல்லாத அந்த நல்ல யாழினை,மாதவி தொழுது,தன் கையிலே வாங்கிக் கொண்டாள்.
‘பண்ணல்,பரிவட்டணை,ஆராய்தல்,தைவரல்,கண்ணிய செலவு,விளையாட்டு,கையூழ்,நுண்ணிய குறும்போக்கு’,
என்னும் எட்டுவகையான கலைத்தொழிலாலும்,இசை எழுப்பினாள் மாதவி.பண்வகையில் குற்றங்கள் ஏதும் இல்லாமல்,மரகதமணி மோதிரங்கள் அணிந்த அவளின் மென்காந்தள் விரல்கள்,பாடுகின்ற வண்டினம் போலப் யாழின் பல நரம்புகளின் மேலாகத் தடவி தடவி வந்தன.
‘வார்த்தல்,வடித்தல்,உந்தல்,உறழ்தல்,உருட்டல்,தெருட்டல்,அள்ளல்,பட்டடை‘,
என இசைநூலோர் வகுத்த எட்டுவகையான இசைக்கரணத்தால் உண்டாகிய இசையின் கூறுகளைத்,தன் செவியால் நன்கு ஆராய்ந்து சீர்தூக்கி அறிந்தாள்.பின்,செம்மைப் படுத்தப்பட்ட யாழினை தன் காதலனான கோவலன் கையிலே நீட்டினாள்.
‘நான் வாசிக்க வேண்டிய பாணியை,தாங்கள் வாசித்துக் காட்டி,ஆணையிடுங்கள்’,என்று மிகவும் பணிவுடன் கேட்டாள்.அவனும் யாழினை இசைத்து,காவிரி குறித்தும்,கடற்கானல் குறித்தும் மாதவி மனம்மகிழப் பாடத் தொடங்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]