கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்

9.மாதவியும் கோவலனும்
(கையில் யாழுடன் மாதவி,கோவலனுடன் மகிழ்ந்திருந்தாள்)
கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவயி னாங்கோர் புன்னை நீழற் புதுமணற் பரப்பில் ஓவிய எழினி சூழவுடன் போக்கி விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை |
170 |
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன் தன்னோடுங் கொள்கையி னிருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென். |
ஆங்கே,கடலின் புலால் நாற்றத்தை மாற்றி நறுமணத்தைப் பரப்பிய,இதழ் விரியும் பூக்களை உடைய தாழை மரங்கள் சூழ்ந்திருந்தன.அதன் உட்பகுதியிலே,இலைகள் அடர்ந்த புன்னை மரத்தின் நிழலிலே,சித்திர வேலைப்பாடுக்ள் அமைந்த திரையதனைச் சுற்றிலும் வளைத்து,மேற்பரப்பையும் சீலையால் மறைத்து கட்டிய கூடாரம் ஒன்று அமைந்திருந்தது.அதன் நடுவே,வெண்மையான தந்தத்தால் செய்த கட்டிலின்மேலே,பயணக்களைப்பால் வாடியிருந்த வசந்தமாலையின் கையில் இருந்த திருந்திய நரம்பினையுடைய நல்ல யாழைச் செவ்வனே வாங்கிக்கொண்டு,கோவலனோடு கூடி மகிழ்வாக இருந்தாள்,பெரிய மலர் போன்ற நெடியக் கண்களையுடைய மாதவி.
வெண்பா
வேலை மடற்றாழை யுட்பொதிந்த வெண்தோட்டு மாலைத் துயின்ற மணிவண்டு-காலைக் களிநறவந் தாதூதத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெண்கதிரோன் தேர். |
கடற்கரையிலே உள்ள மடல் விரிந்த தாழையின் உள்ளே பொதிந்த வெண்மையான இதழ்களில்,மாலைப்பொழுதிலே தேனுண்டு உறங்கிய நீலநிற வண்டுகள்,காலைப் பொழுதில் களிப்புத் தரும் தேனையும் பூந்தாதினையும் ஊதும்படியாக,அழகிய தெளிந்த நிறத்தையுடைய காலைக்கதிரவனின் தேரானது,கீழ்திசை அடிவானத்தில் மெல்ல எழுந்தது.
கடல் ஆடு காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]