கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்
8.மக்களின் களிப்பு
(மரக்கலம் நிற்கும் துறைமுகத்தில் மக்களின் ஆராவாரம்.)
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய மலைப்பஃ றாரமுங் கடற்பஃ றாரமும் வளந்தலை மயங்கிய துளங்குகல விருக்கை அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் |
155 |
பரத குமரரும் பல்வே றாயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும் விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதங் கொள்ளுந் தலைநாட் போல |
160 |
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக் கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கியைந் தொலிப்பக் |
165 |
மிகுதியாகக் குவித்திருந்த குற்றமில்லாத மலைதந்தப் பொருட்கள் பலவும்,கடல்தந்தப் பொருட்கள் பலவும்,இவ்வளங்களை தம்முள் ஏந்திய மரக்கலங்கள் அசைகின்ற கடற்கரையின் அருகிலேயுள்ள சோலை சூழ்ந்த ஒர் இடத்தில்,
அரசிளங்குமாரரும்,அவருடைய உரிமை மகளிரும்;வணிக குமாரரும்,அவர்தம் பல்வேறு வகைப்பட்ட காமக்கிழத்தியரும்,ஆடல் மகளிரும்,பாடல் மகளிரும்,கூட்டம் கூட்டமாகத் தங்கியிருந்தனர்.அவர்கள் இருக்கும் இடங்களிலே,அவர்களைத் திரைச்சீலைகள் எங்கும் சூழ்ந்திருந்தன.
விண்ணை எட்டும் புகழினையுடைய கரிகால் வளவன்,புதுப்புனல் விழாவினைக் கொண்டாடிய தலைநாளிலே,வெவ்வேறு நடையுடை பாவனைகளும்,வெவ்வேறு ஆரவாரமும் உடையவர்களாகப் பலர் விழாத்தளத்திலே விளங்குவர்.அவர்களைப் போல,கடற்கரையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் வீறுபெற்றுத் தோன்றினர்.கடலின் கரையைக் குத்தியெடுத்துப் பெயர்த்து வந்து கடலுடன் கலக்கும் காவிரியாற்றின் புகார் முகமெங்கும்,திரண்ட நால்வகை வருணத்தவரின் அடங்காத ஆரவாரங்கள் எல்லாம்,ஒரே பேரொலியாக ஒலித்துக்கொண்டே இருந்தது …
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]