கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்

7.பற்பல விளக்குகள்
(கடற்கரையில் எல்லா புறமும் பற்பல விளக்குகள் மிகுந்திருந்தன.)
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் |
135 |
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும் காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் கூவியர் காரகற் குடக்கால் விளக்கமும் நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும் இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் |
140 |
இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும் மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும் கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கீண்டி |
145 |
இடிக்கலப் பன்ன ஈரயிர் மருங்கிற் கடிப்பகை காணுங் காட்சிய தாகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றுங் கைதை வேலி நெய்தலங் கானற் |
150 |
பொய்த லாயமொடு பூங்கொடி பொருந்தி |
வண்ணக் கலவைகள்,சாந்து வகைகள்,மலர்கள்,சுண்ணப் பொடிகள்,பணிகார வகைகள் ஆகியவற்றை விற்பவர்கள் தங்களுடைய கடைகளில் பலப்பல விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர்.
செய்யும் தொழிலில் வல்லவரான தட்டார்,அணிகலன் செய்யும் இடங்களில் பலவகை விளக்குகள் இருந்தன.
பிட்டு வாணிகர்,பிட்டு விற்கும் இடங்களில் பல விளக்குகளை வைத்திருந்தனர்.
அப்பம் விற்கும் வாணிகர்,குடம் போன்ற தண்டில் கரிய அகல்விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர்.
பண்டங்கள் பலவும் விற்கும் பெண்கள்,தம் கடையில் நிறைய விளக்குகளை ஏற்றி வைத்திருந்தனர்.
இடையிடையே மீன் விற்பவர் இடங்களில் பலவகை விளக்குகள் இருந்தன.
கடலிடத்தே செல்லும் மரக்கலங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமும் இருந்தது.
மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து பிடிக்கும் வலையினையுடைய பரதவர்,மீன்பிடி படகுகளிலே விளக்குகளை வைத்திருந்தனர்.
வேற்றுமொழி பேசும் தேசத்தவர் வைத்திட்ட விடிவிளக்குள் பல இருந்தன.
மிகப் பெரிய பண்டக சாலைகளைக் காக்கும் காவலர் கொண்டிருந்த விளக்குகளும் காணப்பட்டன.
இப்படிப் பூம்புகார் கடற்கரை முழுவதிலும்,எண்ண முடியாத அளவிற்கு எல்லாப் புறமும் விளக்குகள் மிகுந்திருந்தன.இதனால்,அங்கிருந்த இடிக்கப்பட்டுச் சலிக்காத மாவு போன்ற நுட்பமான மணலின் மீது,ஒரு சின்னக் கடுகைப் போட்டால்கூட அது நன்றாக நம் கண்ணுக்குப் புலப்படும்படி,அந்த இரவு நேரத்தில் வெளிச்சம் எங்கும் பரவியிருந்தது.
நீர் மிகுந்த பரப்பதனில்,மணமிகுந்த தாமரையை வேலியாக உடைய மருதநிலம்போல,தாழையை வேலியாகவுடையது நெய்தல் நிலம்.அந்நிலத்தில் கோவலனுடன் வந்த மாதவி என்னும் பூங்கொடியாள்,தனது தோழியர் கூட்டத்துடன் விளையாடி மகிழ்ந்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]