கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்
6.கடற்கரைப் பயணம்
(இருபத்தெட்டு நாள் நடந்த இந்திர விழா முடிவில் மக்கள் கடலில் நீராடச் சென்றனர்.மாதவியும் கோவலனும் அவர்களோடு செல்கின்றனர்.)
உருகெழு மூதூர் உவவுத்தலை வந்தெனப் பெருநீர் போகும் இரியன் மாக்களொடு மடலவிழ் கானற் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டின ளாகிப் பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப |
115 |
வைகறை யாமம் வாரணங் காட்ட வெள்ளி விளக்கம் நள்ளீருள் கடியத் தாரணி மார்பனெடு பேரணி அணிந்து வான வண்கையன் அத்திரி ஏற மானமர் நோக்கியும் வைய மேறிக் |
120 |
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின் மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத் தாசியர் தங்கலன் ஒலிப்ப |
125 |
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயருந் திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து மகர வாரி வளந்தந் தோங்கிய நகர வீதி நடுவண் போகிக் கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் |
130 |
வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பிற் கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும் மாலைச் சேரி மருங்குசென் றெய்தி |
(மாதவி விருப்பம்)
இருபத்தெட்டு நாள் நடந்த இந்திர விழா,முழுமதி நாள் அன்று நிறைவு பெற்றது.பகைவர்க்கு அச்சத்தைக் கொடுக்கும் புகார் நகரில் இருந்து,கடற்கரையை நோக்கி மக்கள் கடலாடுவதற்கு அணியணியாக விரைந்து சென்று கொண்டிருந்தனர்.அவர்களோடு சென்று,தாழை புன்னை மடல் அவிழ்க்கும் சோலைகளையுடைய கானற்சோலையிலே,தானும் கடல் விளையாட்டைக் காண வேண்டுமென்று கோவலனிடம் வேண்டினாள் மாதவி.அவனும் அதற்கு இணங்கினான்.
(கடற்கரைக்குப் புறப்படுகின்றனர்)
பொய்கைகளில் தாமரைப் பூவிலே துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து வாய் விட்டுக் கூவ,பொழுது புலர்ந்தது என்று சேவல்கள் கூவி அறிவித்தன.வானத்திலே தோன்றிய விடிவெள்ளியின் ஒளி,நிலத்திலே பரவி இருந்த இருளைச் சற்றே நீக்கியது.மாலையணிந்த மார்பினையுடைய கோவலனோடு,பேரணிகள் பலவும் அணிந்தவளாக,மாதவியும் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டாள்.வானத்து மழை மேகம் போல வாரி வழங்கும் கைகளை உடையவனான கோவலன்,கோவேறு கழுதையின் மேலாக ஏறினான்.மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடுவண்டியிலே ஏறிக் கொண்டாள்.
(கடற்கரைப் போகும் வழி)
பலப்பல கோடிக்கணக்கான மதிப்புடைய மாடங்கள் நிறைந்த வாணிகர் வீதியினை அடைந்தனர்.பெரிய கடைத் தெருவில் மலர்கள் அணிசெய்த மாணிக்க விளக்குகளை ஏற்றி,அங்கே மலர்களையும் அருகம்புல்லையும் நெல்லையும் தூவி வழிபட்டு,மங்கல தாசியர்கள் தம் அணிகலன்கள் ஒலிக்க,இரு புறமும் திரிந்து போய்க் கொண்டிருக்கின்ற,திருமகள் குடிகொண்டிருக்கும் பட்டினப்பாக்கத்தைக் கடந்து சென்றனர்.
பின்,கடல் வளத்தால் உயர்வுடன் விளங்கிய மருவூர்ப்பாக்கம் வீதியின் நடுவாகச் சென்றனர்.மரக்கலங்கள் செலுத்தி பொருள் ஈட்டி,புலம்பெயர்ந்து வந்த வணிகர் கூட்டம் தங்கியிருக்கும் கூல வீதியினையும் கடந்து சென்றனர்.’இன்ன இன்ன சரக்கு இது’ என்று எழுதி அறிவிக்கப்பட்டிருந்த மாலைச்சேரியின் வழியாகச் சென்று,நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை அவர்கள் அடைந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]