கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்

5.மாதவியின் அலங்காரம்
(மாதவி பலர் முன் ஆடியதால்,கோவலன் அவள் மீது கோபம் கொள்கிறான்.தன்னை பலவாறு அலங்கரித்து,அவன் கோபத்தை நீக்கினாள் மாதவி.)
அந்தரத் துள்ளோர் அறியா மரபின் வந்து காண்குறூஉம் வானவன் விழவும் ஆடலுங் கோலமும் அணியுங் கடைக்கொள ஊடற் கோலமோ டிருந்தோன் உவப்பப் |
75 |
பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை யோமா லிகையினும் ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை |
80 |
வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி அலத்தக மூட்டிய அஞ்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்லணி செறீஇப் பரியக நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக் கமைவுற அணிந்து |
85 |
குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ் நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக் கணிந்து |
90 |
மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொற் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக் கமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம் |
95 |
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்நெறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத்து அகவயின் ஆரமோ டணிந்து |
100 |
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்தாங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்காது அகவயின் அழகுற அணிந்து |
105 |
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மையீர் ஓதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கோவலற் களித்துப் பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள் |
110 |
விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும்,பிறர் அறியாதபடி மாறுவேடம் பூண்டு வந்து காணும் இந்திர விழாவும்,மாதவியின் அழகிய ஆடலும்,கோலமும் ஒருவாறு முடிந்தன.பலரும் காண மாதவி அவ்விழாவில் ஆடியதைக் கண்ட கோவலன்,அவள்மேல் கோபம் கொண்டிருந்தான்.அவன் மகிழ்ச்சி கொள்ளுமாறு,
மாதவி தன்னைப் பலவகையாக அலங்காரம் செய்து கொள்ளத் தொடங்கினாள்.
(நீராடல்)
பத்து வகை துவரினாலும்(மூலிகைப் பொருட்கள்),ஐந்து வகை நறுமணப் பொருட்களினாலும்,முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப்பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே,வாசனைமிக்க நெய் பூசிய தன் மணம் கமழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள்.நீராடிய பின்,தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக்காட்டி ஈரம் உலரத்தினாள்.கூந்தலை ஐந்து பகுதியாகப் பிரித்து,கத்தூரிக் குழம்பினையும் சவாதினையும் அப் பகுதிகளுக்குத் தடவினாள்.
(கால் அணிகலங்கள்)
சிறிய அடிகளிலே செம்பஞ்சுக் குழம்பினை பூசியனாள்.நன்மை பொருந்திய மெல்லிய விரல்களில் காலாழி,மகரவாய் மோதிரம்,பீலி போன்ற அணிகளை அணிந்தாள்.காலுக்குப் பொருத்தமான பரியகம்,நூபுரம்,பாடகம்,சதங்கை,அரியகம் முதலான அணிகலன்களை அணிந்துகொண்டாள்.
(தொடை அணி)
திரண்ட தொடைகளுக்குக் குறங்குசெறி எனும் அணிகலன் அணிந்திட்டாள்.
(இடை அணி)
அளவில் பெரிய முத்துகள் முப்பத்தியிரண்டால் கோவையாகத் தொடுக்கப்பட்ட விரிசிகை என்னும் அணியினை,தன் இடையை அலங்கரித்த பூவேலைப்பாடு செய்த நீலப்பட்டாடையின் மீது மேகலையாக உடுத்தினாள்.
(தோள் அணி)
அழகான கண்டிகையோடு பின்னிக் கட்டிய,தூய மணிகள் சேர்த்துக் கோர்த்த முத்துவளையைத் தன் தோள்களுக்கு அணிந்தாள்.
(கை அணிகலங்கள்)
மாணிக்க மணிகளுடன் வயிரங்கள் பதித்துவைத்த சித்திர வேலைப்பாடமைந்த சூடகம்,செம்பொன்னால் செய்த வளையல்கள்,நவமணி வளையல்கள்,சங்கு வளையல்கள்,பலவகைப் பவழ வளையல்கள் ஆகிய அணிகலன்களை மெல்லிய மயிரினை உடைய தன் முன்கைகளில் பொருந்துமாறு அணிந்தாள்.வாளை மீனின் பிளந்த வாயைப் போன்ற வாயகன்ற முடக்கு மோதிரம்,செந்நிற ஒளிவீசும் மாணிக்கம் பதித்த கிளர்மணி மோதிரம்,சுற்றிலும் ஒளி பரப்பும் மரகதத் தாள்செறி ஆகியவற்றைக் காந்தள் மலர் போன்ற தன் மெல்லிய விரல்கள் முழுதும் மறையும்படி அணிந்தாள்.
(கழுத்து அணிகலங்கள்)
வீரச்சங்கிலி,நுண்ணியத் தொடர் சங்கிலி,பூணப்படும் சரடு,புனைவேலைகள் அமைந்த சவடி,சரப்பளி போன்ற அணிகளை,கழுத்திலே கிடந்த முத்து ஆரத்துடன் அணிந்து கொண்டாள்.சங்கிலிகள் முழுவதையும் ஒன்றாய் இணைத்துப் பூட்டிய கொக்கி ஒன்றில் இருந்து பின்புறமாகச் சரிந்து தொங்கிய,அழகிய தூய மணிகளால் செய்யப்பட்ட கோவை அவள் கழுத்தை மறைத்துக் கிடந்தது.
(காது அணி)
இந்திர நீலத்துடன் இடையிடையே சந்திரபாணி என்னும் வயிரங்கள் பதித்துக் கட்டப்பட்ட,குதம்பை எனும் அணியை,தன் வடிந்த இரு காதுகளில் அழகுற அணிந்து கொண்டாள்.
(கூந்தல் அணிகலங்கள்)
சிறந்த வேலைப்பாடு அமைந்த வலம்புரிச்சங்கு,தொய்யகம்,புல்லகம் இவற்றைத் தன் கரிய நீண்ட கூந்தலில் அழகுற அணிந்து கொண்டாள்.
இப்படியெல்லாம் அணிகள் பல பூண்டு வந்து,கூடலும் ஊடலுமாக மாறிமாறி இன்பம் அளித்து,பள்ளியறையிலே கோவலனுடன் கலந்து மகிழ்ந்திருந்தாள் மாதவி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]