இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

6.திருமாவளவன்
(இமயத்தில் புலிச்சின்னத்தைப் பொறித்தான் திருமாவளவன்)
இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன் |
90 |
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப் |
95 |
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவர் உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு |
பெருநிலமாகிய தமிழகத்திலே தம்மை எதிர்த்துப் போர்புரிய இரு திசைகளான மேற்கிலும்,தெற்கிலும் எவரும் இல்லாத காரணத்தினால்,போரின் மேற் கொண்ட கடுமையான ஆசையினாலே,கரிகால் சோழன்,வாளும்,குடையும்,முரசும் முன்னே சென்றிட,நல்லநாளிலே பகைதேடிப் புறப்பட்டான்.’என் வலிமைப் பொருந்திய தோள்கள்,இந்நிலவுலகிலே தகுந்த பகைவரைப் பெறுக‘ என வேண்டி,புண்ணியதிசை என்று சிலரால் கூறப்படும் வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்றான்.அங்கே நின்றிருந்த இமயமலை அவனைத் தடுத்து நின்றது.’குன்றாத ஊக்கதினையுடை என் விருப்பம் ஒழயுமாறு,இந்தப் பெரிய இமயமலையானது குறுக்கிட்டு என் எண்ணத்தைத் தடுத்ததே‘ என்று இமயமலையின் மேல் சினம் கொண்டான்.தேவர்கள் வாழும் இமயத்தின் உச்சியிலே,தனது புலிச்சின்னத்தைப் பொறித்தான்.அதன்பின்,இமயத்துக்கு அப்பாலும் செல்லும் கொள்கையைக் கைவிட்டு,சோழநாடு திரும்பினான்.திரும்பும் வழியிலே,வடநாட்டின் பல்வேறு மன்னரும்,அவனுக்குப் பற்பல காணிக்கைகளைத் திறையாகத் தந்து பணிந்தனர்.
கரிகால சோழனுக்கு ஆயுதம் வழங்கிய காஞ்சி தெய்வம்
கரிகால் சோழன் இமயம் செல்லும்போது காஞ்சி நகரில் இருந்த ‘சாத்தன்’ என்னும் தெய்வத்தை வேண்டியதன் பலனாக,அந்த தெய்வம் அவனுக்குச் ‘செண்டு’ என்னும் ஆயுதத்தை வழங்கியது.அந்த ஆயுதம் கொண்டு கரிகால் சோழன் இமயத்தை அடித்து,புலிச் சின்னம் பொறித்தான் என்றும் கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]