இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

5.வீரர்கள் பலியிடல்
(தம் வேந்தன் நலம்பெற வேண்டி,வீரர்கள் தம் தலையை வெட்டி பலிக் கொடுத்தனர்)
மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும் பட்டின மருங்கிற் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறன் மன்னற் குற்றதை யொழிக்கெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குரவம் பாகெனக் |
80 |
கல்லுமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோற் பல்வேற் பரப்பினர் மெய்யுறத் தீண்டி ஆர்த்துக் களங்கொண்டோ ராரம ரழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென |
85 |
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங் குயிர்ப்பலி யுண்ணு முருமுக்குரன் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி |
மருவூர்பாக்கத்தின் வீரச்செறிவுடைய வீரர்களும்,பட்டினப்பாக்கத்தில் வாழும் படைகலன் ஏந்திய வீரர்களும் பெரிய பலிபீடம் முன்சென்று,’செவ்விய திரலையுடைய எம் மன்னர் தமக்கு நேர்கின்ற இடையூறுகளை ஒழிப்பாயாக‘,என வேண்டினர்.’பூதத்திற்க்குத் தம்மையே பலியிட்டோர்,வலிமையின் எல்லையாக விளங்குவர்‘,எனச் சூளுரைத்தனர்.கல்வீசும் கவண் என்னும் கருவி உடைய வீரர் சிலரும் வந்தனர்.கருந்தோல் கவசம் அணிந்து வேல்தாங்கிய வீரர் பலரும் நின்றனர்.முன்னர்ப் போர் நிகழ்ந்தபோதெல்லாம் போர்க்களத்தையே தமதாக்கிக் கொண்டு வீரத்துடன் திகழ்ந்த அவர்கள் எல்லோரும் தத்தம் தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.அரிய அமரக்களத்தின் பரப்பிலே,கண்டோர் அஞ்சுமாறு கண்ணிலே நெருப்பெழப் போரிட்டவர் அவர்கள்!அத்தகையோர்,’வெற்றி வேந்தன் வெற்றி கொள்க!’,என முழங்கி,நல்ல பலிபீடம்தன்னில்,தன் வேந்தன் நலம்பெற வேண்டி,தமது கருந்தலையை வெட்டி வைத்தனர்.அவ்வேளையிலே உயிர்ப்பலியினை உண்ணும் பூதத்தின் இடிமுழக்கம் போன்ற குரல் நாற்றிசையும் எதிரொலித்து எழுந்தது.அதனுடன்.பலிபீடத்தில் வைக்கப்பட்ட தலையற்ற உடல்கள்,தம் தோளிலே பூண்டிருந்த மயிர்கள் நீக்கப்படாத முரசை தம் கரங்களால் தட்டி ஒலி எழுப்பினர்.இவ்வாறு,நரபலியை பூதத்திற்குப் படைத்தனர்,புகார் நகரத்து வீர மறவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]