இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

3.பட்டினப் பாக்கம்
(புகாரின் பட்டினப்பாக்கம் கட்சிகளை விவரிக்கும் பகுதி)
கோவியன் வீதியுங் கொடித்தேர் வீதியும் | 40 |
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோ ரிருக்கையும் வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதருங் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் |
45 |
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் சூதர் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் |
50 |
பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தே ரூருநர் கடுங்கண் மறவர் |
55 |
இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும் |
மிகவும் பெரிதான இராசவீதியும்;இதனையடுத்துக் கொடியுடைய தேர்கள் செல்லும் தேர் வீதியும்;கடைத்தெருவும்;பெருங்குடி வாணிகர் வாழ்கின்ற மாட மாளிகைகள் இருக்கின்ற தெருவும்;வேதம் ஓதும் அந்தணர் இருக்கும் இடங்களும்;அனைவரும் விரும்பும் உழவர்கள்,ஆயுள் காக்கும் மருத்துவர்கள்,காலம் கணிக்கும் சோதிடர்கள் முதலியோர் பகுதிபகுதியாக வாழ்கின்ற இடங்களும் இருந்தன.
முத்துக் கோர்ப்போர்களும்,சிறந்த கொள்கையோடு சங்கை அறுத்து வளையல்கள் செய்வோரும்,இவர்கள் வாழும் அகன்ற வீதியும்,அரசனை வணங்கும் சூதர்,புகழ்ந்து பேசும் மாகதர்,வைதாளி ஆட்டமாடும் வேதிகர்,காலம் கணிக்கும் நாழிகைக் கணக்கர்,ஆடலைத் தொழிலாகக் கொண்ட அரங்கக் கூத்தியர்,பரத்தையர்,ஏவல் தொழில் செய்து வாழ்பவர்,வீட்டுவேலை செய்யும் பெண்கள் ஆகியோர் வாழும் இடங்களும் இருந்தன.
தமக்குரிய தொழிலைப் பயின்ற குயிலுவக் கருவியாளரும்,பல்வகை நிகழ்ச்சிகளுக்கு வாத்தியம் வாசிப்பவரும்,நகைச்சுவையுடன் பேசும் விதூடகரும் தனித்தனியே வசிக்கும் இடங்களும் இருந்தன.விரைந்து செல்லுகின்ற குதிரைகளைச் செலுத்தும் குதிரைக்காரரும்,யானைப்பாகரும்,நெடிய தேரைச் செலுத்தும் தேர்ப்பாகரும்,பயமறியாது வீரத்தில் சிறந்த மறவரும்,இவர்கள் அனைவரும் அரசனின் கோட்டையைச் சுற்றி இருக்கும்படி அமைந்த வாழ் இடங்களும் இருந்தன.
இத்தகைய பலரும் வாழ்கின்ற சிறப்புடன்,பெருமை பொருந்திய பெரியோர்கள் நிறைந்து,பாடல் அமைந்த சிறப்பினை உடையதாக விளங்கியது புகாரின் பட்டினப்பாக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]