இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

பாசவர் வாசவர் பன்னிண விலைஞரோ டோசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும் கஞ்ச காரருஞ் செம்புசெய் குநரும் மரங்கொஃ றச்சருங் கருங்கைக் கொல்லருங் கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டாளரும் |
30 |
பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களுங் குழலினும் யாழினுங் குரன்முத லேழும் |
35 |
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும |
மேற்கூரை வேயப்படாத திறந்தநிலை மாளிகைகளும்,வியக்கதக்க
பண்டகசாலையும்,மானின் கண் போன்ற விசாலமான சாளரங்களையுடைய மாளிகைகளும் இருந்தன.காண்போர் மயங்கி,மேற்செல்லாதவாறு திகைத்து நிற்கச் செய்யும் பயனுள்ள பொருட்கள் இடையறாது நிறைந்த யவனர் இருப்பிடங்களும் இருந்தன.
மரக்கலங்கள் மூலம் வருகின்ற செல்வங்களுக்காகத் தம் நாடுவிட்டு நாடு செல்லும் கடலோடிகள் பலப்பல கூடி வாழ்ந்த கடலோரக் குடியிருப்புகளும்;வண்ணக் குழம்பும்,சுண்ணப் பொடியும்,குளிர்ந்த மணமுள்ள சந்தனமும்,பூவும்,நறுமணப் புகைப் பொருள்களும்,கோட்டம் முதலிய மேலான மணவிரைகளும்,இவையனைத்தையும் விற்போர் திரிந்து கொண்டிருந்த நகர வீதிகளும் இருந்தன.
பட்டு,மயிர்,பருத்தி நூல் இவற்றினால் அழகாகப் பின்னிக்கட்டும் நுண்மையான கைத்தொழில் வல்லுனரான காருகர் வாழ்கின்ற இருப்பிடங்களும்,குற்றமற்ற முத்தும்,பட்டும்,பவளமும்,சந்தனமும்,அகிலும்,முத்தும்,மணியும்,பொன்னும்,அரிய அணிகலன்கள் என்னும் செல்வமும்,இன்னும் அளவற்ற பல வளங்களும்,எல்லா இடங்களிலும் குவிந்திருந்த அகன்ற வாணிக வீதிகளும் இருந்தன.
பகுதி வேறுபாடுகள் தெரிந்த பலப்பல பண்டங்களும்,எண்வகைத் தானியங்களும் தனித்தனியே குவிந்து கிடக்கின்ற கூலக்கடைத் தெருவும்,பிட்டு வணிகரும்,அப்பம் சுடுவாரும்,கள் விற்கும் வலைச்சியரும்,மீன் விற்கும் பரதவரும்,வெண்மையான உப்பு விற்கும் உமணவரும்,வெற்றிலை,மணப்பொருள்களை விற்பவரும்,பல்வகை இறைச்சி விற்பவரும்,எண்ணெய் வாணிகரும் இருந்த மாமிசம் நிறைந்த இடங்களும் இருந்தன.
வெண்கலத்தில் பாத்திரம் செய்யும் கன்னாரும்,செப்பு பாத்திரம் செய்யும் கொட்டிகளும்,மரவேலை செய்யும் தச்சரும்,வலிய கைவினையுடைய கொல்லரும்,பார்ப்பவர் கண்ணின் முன் தன்தொழிலை நிறுத்தும் ஆற்றல் படைத்த ஓவியக் கலைஞரும்,மண்பொம்மைகள் செய்யும் குயவரும்,பொன் வேலை செய்யும் தட்டாரும்,இரத்தின வேலைகள் செய்பவரும்,தையர்காரரும்,தோலில் தையல் செய்வோரும்,துணிகள் கொண்டு படம் முதலியன செய்வோரும்,நெட்டிக் கோரைகள் கொண்டு விலங்கு பறவை பூங்கொத்து முதலிய கலைப்பொருள் செய்து அழகு காட்டி வாழ்வாரும்,இவ்வாறு பழுதின்றிக் கைத்தொழிலால் பல்வேறுபட்ட மக்கள் வாழும் இடங்களும் இருந்தன.
குழலாலும்,யாழாலும் குரல் முதலாகிய ஏழிசைகளையும் குற்றமின்றி இசைத்துப் பண்களையும் அவற்றிலே பிறக்கும் திறங்களையும் காட்டி பாடவல்ல இசைமரபினை அறிந்த பெரும் பாணர்களின் இருப்பிடங்களும்,மற்றும் சிறிய சிறிய கைத்தொழில் செய்வாருடன்,பிறருக்கு வேலைசெய்யும் ஏவலரும் சேர்ந்து வாழும் இடங்களும் இருந்தன.
இவ்வாறு குற்றமின்றிச் செழித்துப் பரந்து கிடந்தது புகார் நகரின் மருவூர்ப்பாக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]