இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

15.ஆடவர் மயக்கம்
(புகார் நகரில் திரிந்த பரத்தையர் அழகைக் கண்ட ஆடவர்,பலவாறு எண்ணி மயங்கினர்)
கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்தாங்கு இருகருங் கயலோ டிடைக்குமிழ் எழுதி |
205 |
அங்கண் வானத் தரவுப்பகை யஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல் நீர்வாய் திங்கள் நீள்நிலத் தமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மீனேற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த |
210 |
வான வல்லி வருதலும் உண்டுகொல் இருநில மன்னற்குப் பெருவளங் காட்டத் திருமகள் புகுந்ததிச் செழும்பதி யாமென எரிநிறத் திலவமும் முல்லையும் அன்றியுங் கருநெடுங் குவளையுங் குமிழும் பூத்தாங்கு |
215 |
உள்வரிக் கோலத் துறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல் மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது |
220 |
நாணுடைக் கோலத்து நகைமுகங் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவியாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென |
தென்றல் வீசும் புகார் வீதிகளிலே,
‘கரிய மேகத்தைச் சுமந்து,தன்னுள் உள்ள சிறிய கறையை ஒழித்து,கரிய கயல் மீன் போன்ற கண்களையும் அதற்கு இடையே குமிழ் மலர் போன்ற மூக்கினையும் கொண்டு,அகன்ற அழகிய வானில் இராகு கேது பாம்புகளுக்கு அஞ்சி நிலவு இங்கே வந்து திரிகின்றது போல’, எனவும்,
‘ஈரம் நிறைந்த நிலவாகிய பெரிய நிலத்தில் உள்ள அமுதத்தின் சிறப்புப் பொருந்தியத் துவளையுடைய நீரைப் பருகி,அழகு பெற விரும்பி,மகரக் கொடியையுடைய காமதேவன் வளர்த்த,மின்னல்கொடியானது இங்கே வந்ததோ’,எனவும்
”பெரிய நிலத்தை ஆள்கின்ற அரசனுக்கு,தம் பெரிய வளத்தைக் காட்ட விரும்பித் திருமகள் இச்செழுமையுடைய நகரம் புகுந்திருப்பாள்’ என கருதியது தாமரை.அத்தாமரை அழகு நங்கையின் செந்நிற முகம் ஒத்தது.எரிதழல் நிறமுடைய இலவ மலர் போன்ற வாயும்,வெள்ளை நிறமுடைய அரும்புகள் போன்ற பற்களையும்,கருமை நிறமுடைய நீள்குவளை மலர் போன்ற கண்களையும்,குமிழ் மலர் போன்ற மூக்கினையும் தன்னுள் அடக்கி கொண்டு,வேற்று உருவம் கொண்டு திருமகளைச் சேரவேண்டும் என்று அவளைத் தேடி,அக்கள்ளத் தாமரை இவ்வீதியிலே திரிகிறதோ’,எனவும்
‘அரசனது செங்கோலை மறுத்ததாகும் என்று அஞ்சி,பல உயிர்களைக் கவரும் பிளந்த வாயினையுடைய எமன்,தன் ஆண் இயல்புகளை மாற்றிக் கொண்டு,தன் கொலைத் தொழிலை மாற்றிக் கொள்ளாது,நாணமுடைய கோலமும் நகையுடைய முகமும்,பண் மொழிகின்ற நரம்பினையுடைய திவவுயாழ் போலப் பேசிப்,பெண்ணுருவம் தாங்கி புகாரில் திரிகின்றான் போலும்’,எனவும்
கண்ட ஆண்கள் மயக்கத்தக்க இளம்பரத்தையர்கள் பலர் உலா வந்தனர்.
காமதேவன் ஏன் அழகு பெற விரும்பினான்?
காதல் தெய்வமான காமதேவன் மிகுந்த அழகு உடையவன்.சிவபெருமான் ஒரு நாள் ஆழ்ந்தத் தியானத்தில் மூழ்கியிருந்தார்.அவர் தவத்தைக் கலைக்க எண்ணி,காமதேவன் தன் ஆயுதமான மலர்ம்புகளை அவர் மேல் எய்தினான்.இதனால் கோபம் கொண்ட சிவன்,தனது முக்கண்ணைக்கொண்டு காமதேவனை எரித்து விடுகிறார்.காமனின் மனைவியான ரதிதேவி சிவனிடம் தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு மன்றாடுகிறாள்.ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி, சிவ பெருமான் உருவமற்ற நிலையில் காமதேவனை உயிர்ப்பிக்கிறார்.
இதனால் தான்,நிலவில் உள்ள நீரைப் பருகி காமதேவன் அழகுப் பெற விரும்பினான் என்று கூறப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]