இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்
14.மலய மாருதம்
(புகாரிலே கோவலன்போலத் தென்றல் உலா வந்தது)
காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னோடு |
190 |
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து காமக் களிமகிழ் வெய்திக் காமர் பூம்பொதி நறுவிரைப் பொழிலாட் டமர்ந்து |
195 |
நாண்மகி ழிருக்கை நாளங் காடியிற் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையுஞ் சாந்தும் புலராது சிறந்து நகையா டாயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு |
200 |
திரிதரு மரபிற் கோவலன் போல இளிவாய் வண்டினொ டின்னிள வேனிலொடு மலய மாருதந் திரிதரு மறுகிற் |
அகன்ற அப் புகாரிலே,
தன்னை காதலித்து வந்த கோவலனைப் பிரிந்து பழிச்சொல் எய்தாத,அழகிய வளைந்த மகரக் குழையணிந்த மாதவியோடு;
இல்லத்தில் வளரும் முல்லை,மல்லிகை,இருவாட்சி,தாழியுள் மலர்ந்த குவளை,வண்டுகள் சூழும் செங்கழுநீர் ஆகிய பூக்கள் ஒன்று சேர்த்து நெருங்கி கட்டிய மாலையிலே அழகுபெற்று;
காமமாகிய கள்ளினை உண்டு களித்து;
அழகிய நறுமணம் மிக்கப் பூம் பொழிலில் விளையாட விரும்பி;
நாள் முழுதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கும் நாளங்காடியில் பூக்கள் விற்கும் இடங்களில் பற்பல நறுமணப் பூக்களின் இடையே புகுந்து,புகையும் சாந்தும் வாடாது நகையாடி மகிழும் கன்னியர் கூட்டத்தின் நன்மொழிகளைக் கேட்டுத் திளைத்து;
குரல் என்னும் பாட்டிசைக்கும் பாணரோடும்,நகரில் உள்ள பரத்தையரோடும்;
இன்புற்று உலா வரும் கோவலனைப் போல,
‘இசை இசைக்கும் வண்டோடும்,இனிய இளவேனிலோடும்,பொதிகைமலையில் இருந்து வரும் தென்றல் காற்றாகிய மலையமாருதமும்‘ இனிதாகத் தவழ்ந்து விளையாடியது நகரின் வீதிகளில்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]