இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

12.வேறு கடவுள்கள்
(இந்திரவிழா நடைபெறும் போது,வேறு கடவுள்களையும் போற்றி வணங்கினர்)
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் |
170 |
வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை யொருபால் |
175 |
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் |
ஒரு தாயின் வயிற்றிலே பிறக்காத தூய மேனியையுடைய மாதேவனாகிய சிவபிரானின் கோவிலிலும்,ஆறுமுகத்தையும் செவ்விய நிறமுடைய முருகவேல் அழகோடு விளங்கும் கோயிலிலும்,வெண் சங்கு போன்ற மேனியுடைய பலதேவனின் கோயிலிலும்,நீலமேனியினனாகிய திருமாலின் கோயிலிலும்,முத்து மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடையினையுடைய மன்னனின் கோயிலிலும்,மிகவும் மூத்த இறைவன் அருளிய வாய்மையிற் சிறிதும் பிறழாத நான்மறை மரபுகளின்படி,யாகத்தீ வளர்த்து விழா எடுக்கப்பட்டது.நால்வகைத் தேவருக்கும்,பதினெட்டு வகைக் கணங்களுக்கும் வேற்றுமை பிரிவுகளை அறிந்துக் கொண்டு வகுக்கப்பட்ட வெவ்வேறு தோற்றமுடைய தனித்தனிக் கடவுள் பலருக்கும் அங்காங்கே சிறப்பாக விழா எடுக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]