அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

8.காமதேவனின் ஆட்சி
(இரவு முதல் வைகறை வரையில் காமன் புகார் நகரெங்கும் ஆட்சி செய்தான்)
அன்ன மென்னடை நன்னீர்ப் பொய்கை ஆம்பல் நாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய்த் தண்ணறற் கூந்தல் பாண்வாய் வண்டு நோதிறம் பாடக் |
75 |
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்பப் அ புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து முள்வாய்ச் சங்கம் முறைமுறை யார்ப்ப உரவுநீர்ப் பரப்பின் ஊர்துயி லெடுப்பி இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் |
80 |
அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான் விரைமலர் வாளியொடு கருப்புவில் லேந்தி மகர வெல்கொடி மைந்தன் றிரிதர நகரங் காவல் நனிசிறந் ததுவென். |
அன்னம் போன்ற மென்னடை;
ஆம்பல் போன்ற மணம்;
தேன் நிறைந்த நறுமணமுடைய தாமரைப் போன்ற சிவந்த வாய்;
கருமையான மணல் போன்ற கூந்தல்,
இவை அனைத்தும் உடையவள் நன்னீர்ப் பொய்கை மகள்.
பண்பாடும் வண்டுகள் வந்து அவளுக்குப் பள்ளி எழுச்சி பாடும்;
இதைக்கேட்டு குவளையாகிய கண்மலர்கள் இதழ் விரியும்;
பறவைகளின் சத்தம் முரசொலியென முழங்கிடும்;
புள்ளிகள் பொருந்திய சிறகினையுடைய சேவலின் முள்போன்ற வாயாகிய சங்கம் முறையிட்டுக் கூவும்,
இங்ஙனம்,கடல்போன்ற பரப்பினையுடைய புகார் நகரினை துயில் எழுப்பின,அதிகாலைக்குரிய சிறப்பொலிகள்.
இருள்மிக்க இரவுப்பொழுது தொடங்கி,வைகறை வேளை அதுவரையும்,மணமலர் அம்புகளுடனும்,கரும்பு வில்லு ஏந்தியவனாக,மீன் பொறித்த வெற்றிக் கொடியினையுடைய காமதேவன்,இரவெல்லாம் ஓய்வின்றித் திரிந்தான்.
புகார் நகரமெங்கும் இவ்வாறு அவனது ஆட்சியே ஓங்கிச் சிறந்து விளங்கிற்று
வெண்பா
கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய், காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது. |
தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு குளிர் நிழலும்,தம்முடன் பிரிந்து வாழ்பவர்களுக்கு வெப்பமும் தரக்கூடியது சோழனின் வெண்கொற்றக் குடை.அதுப்போல முழு நிலவும்,வானில் விளங்கிற்று.
வானத்திலே தவழ்ந்து சென்று,நிலவு தன் கதிர்விரித்து,அல்லிப்பூக்களை மலரச் செய்யும் இரவுப் பொழுதிலே,மாதவிக்கும்,கண்ணகிக்கும் குளிர்ச்சியாகவும்,வெப்பமாகவும் விளங்கி,அவர்களுக்கு முறையே இன்பத்தையும்,துன்பத்தையும் தந்தது.
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]