அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

7.காதலரை பிரிந்த மாதர்
(காதலரை பிரிந்த மாதர் தூக்கமின்றித் தவித்தனர்.)
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊதுலைக் குருகின் உயிர்த்தன ரொடுங்கி வேனிற் பள்ளி மேவாது கழிந்து |
60 |
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து மலையத்து ஆரமு மணிமுத் தாரமும் அலர்முலை யாகத்து அடையாது வருந்தத் தாழிக் குவளையொடு தண்செங் கழுநீர் வீழ்பூஞ் சேக்கை மேவாது கழியத் |
65 |
துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது உடைப்பெருங் கொழுநரோ டூடற் காலத் திடைக்குமி ழெறிந்து கடைக்குழை யோட்டிக் கலங்கா வுள்ளங் கலங்கக் கடைசிவந்து |
70 |
விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத் துறைப்ப |
தம் காதலரைப் பிரிந்த மாதர்,தம்மை கண்டோர் வருந்துமாறு,உலையில் ஊதுகின்ற துறுத்தி முனையின் சூடான பெருமூச்சுடன் நெஞ்சம் வெதும்பினர்.இளவேனிற் காலத்திற்கென அமைந்த நிலா முற்றத்துக்குச் செல்லாமல்,குளிர்காலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் இடைநிலைப் மாடத்தில் தங்கினர்.அங்கு நிலவொளியும்,தென்றலும் புகாதவாறு,அங்கிருந்த சிறிய கண்களையுடைய சாளரங்களையும் அடைத்துவிட்டனர்.மலைச் சந்தனமும்,மணிமுத்து ஆரமும்,திரண்ட முலைகளையுடைய மார்பிலே படவும் தாங்காது வருந்தினர்.தாழியிலே மலர்ந்த குவளை மலர்களும்,தன்மையான செங்கழுநீர் மலர்களையும் தூவி விரித்த படுக்கையில் நிலைகொள்ளாது,அதனையும் விடுத்து எழுந்தனர்.துணைபிரியாத அன்னத்தின் தூவியினைச் செறித்த,இருவர் படுக்கும் பஞ்சனையின் மீது படுத்தும்,தூக்கம் இல்லாது துடி துடித்தனர்.தம் கணவரோடு தாம் ஊடியிருந்த காலத்திலே,இடைநின்ற மூக்கினைச் சிந்தியவராகக்,கடைநின்ற குண்டலங்களையும் நீக்கி,கலங்காத அக்கணவர் உள்ளமும் கலங்குமாறு அவரோடு கலந்து,கடைக்கண் சிவந்து,தனிமைத் துயரத்தால் முத்துமுத்தாக நீர்சொரியக் கலங்கிப் புலம்பியபடி வருந்தியிருந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]