அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்
6.கண்ணகியின் நிலை
(கணவனைப் பிரிந்த கண்ணகி,இன்பமாக இருக்கவேண்டிய வேனில் பருவமதனில் துன்பத்தில் செயலிழந்திருந்தாள்.)
அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் மங்கல வணியிற் பிறிதணி மகிழாள் |
50 |
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப |
55 |
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி யன்றியும் |
அழகிய சிவந்த சிறிய பாதங்களில் சிலம்புகள் அணியாதிருந்தாள்;
மெல்லிய துகிலையுடைய அல்குல் பகுதியிலே அணியும் மேகலாபரணமும் நீங்கிவிட்டது;
மார்புகளில்,குங்குமக் கலவையை அவள் பூசாதிருந்தாள்;
மங்கல அணியினையன்றிப் பிறிதோர் அணியை அவள் புட்டி மகிழவும் இல்லை;
வளைவாகிய குண்டலம் இல்லாதுபோக,வளைந்து தாழ்ந்து தோன்றின அவள் காதுகள்;
மதிப் போன்ற அவள் முகத்திலே,கலவியால் தோன்றும் சிறு வியர்வைத்துளிகளும் தோன்றவில்லை;
செம்மையான கயல்மீன் போன்ற நீண்ட கண்கள்,மையினை மறந்துவிட்டன;
பவளம்போன்ற சிவந்த ஒளிபொருந்திய நெற்றியும் திலகத்தை இழந்திருந்தது;
முத்தின் ஒளிப்பொருந்திய அவள் புன்னகையைக் கோவலன் இழந்திட்டான்;
மை போன்ற அவள் கூந்தல்,நெய் பூசுவதை மறந்தது;
செயலிழந்த நெஞ்சத்துடன்,இவ்வாறு கணவனைப் பிரிந்த கண்ணகி,அந் நிலவுக் காலத்திலே,நெஞ்சம் கலங்கி நின்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]