அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்
2.மாலை வந்தது
(மாலை நேரம் வர,அதனை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர் இன்புறுவர்,கணவனைப் பிரிந்து வாடுவோர் துன்புறுவர்)
கறைகெழு குடிகள் கைதலை வைப்ப அறைபோகு குடிகளொ டொருதிறம் பற்றி |
10 |
வலம்படு தானை மன்ன ரில்வழிப் புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் தாழ்துணை துறந்தோர் தனித்துய ரெய்தக் காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ் வெய்தக் குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு |
15 |
மழலைத் தும்பி வாய்வைத் தூத அறுகாற் குறும்பெறிந் தரும்புபொதி வாசஞ் சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப மல்லல் மூதூர் மாலைவந் திறுத்தென |
20 |
தம் கடமையான வரி செலுத்துவதற்கு மனமுள்ளவரான குடிமக்கள்,தம் கைகளைத் தலைமேல் வைத்துத் துயரமுற்றனர்.தம் மன்னனுக்கு உட்பகையாக விளங்கிய குடிகளோடு புதிய பகை மன்னர் ஒருதலையாகத் தொடர்பு கொண்டனர்.வெற்றி பொருந்திய சேனைகளையுடைய அந்த நாடாளும் மன்னர் அந்நாட்டில் இல்லாத வேலையாகப் பார்த்துப், பகை மன்னர் தன் படையுடன் வந்து,நாட்டுநலம் கெடும்படி அங்கேயே தங்கினர்.இந்த துயரத்தைப் போலத் தம்முடன் துணையாக இருந்த கணவரைப் பிரிந்த மகளிர் மாலை வந்த போது இணையற்ற துயரத்தை அடைந்தனர்.அந்நேரத்தில் காதலனுடன் கூடியிருந்த மகளிரோ,பெரும் மகிழ்ச்சி அடைந்தவராக விளங்கினர்.
கோவலர்,மூங்கில் குழலில் தம் வாயினை வைத்து முல்லைப் பண்ணினை ஊதிக் கொண்டிருந்தனர்;அவர்களுடன் சேர்ந்து,இளமையுடைய வண்டினம் முல்லைப் பூவின் இதழ்மேல் வாய் வைத்து ஊதி தேனுறிஞ்சிக் கொண்டிருந்தன;
அவ்வாறு செய்கின்ற ஆறுகால் வண்டினங்களைத் துரத்தி விட்டு,அவ்வரும்புகளின் உள்ளே அடங்கி நின்ற நறுமணத்தினை,இளந்தென்றலாகிய செல்வன் முகந்து வந்து,புகார் நகரின் தெருக்களில் எல்லாம் பரப்பிக் கொண்டிருந்தான்;
ஒளிபொருந்திய வளையல்களை அணிந்த மங்கள மகளிர்,தத்தம் வீடுகளில் அழகான மணிவிளக்குகளை ஏற்றி வைத்தனர்;
இவ்வாறு வளம் பொருந்திய புகார்நகர் உள்ளே மாலைப்பொழுது வந்து தங்கலானது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]