அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்
9.தலைக்கோல்
(மாதவி ஆடல் அரங்கில் இருந்த தலைக்கோலின் வரலாறு)
பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு |
115 |
கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக் காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்த னாகென வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் |
120 |
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணிய பின்னர் மாலை யணிந்து நலந்தரு நாளாற் பொலம்பூண் ஓடை அரசுவாத் தடக்கையிற் பரசினர் கொண்டு முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப |
125 |
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவுந் தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங்கு |
பெரும்புகழ் பெற்ற மன்னவர்,பகையரசருடன் நடந்த போரில் வென்று,அப்பகையரசர் புறமுதுகிட்ட வேளையிலே,அவருடைய வெண்கொற்றக் குடையின் காம்பினைச் சிதைவின்றி எடுத்துக்கொண்டு வருவர்.அதன் கணுக்களை தூய்மை செய்து,நவமணிகளை கட்டி அலங்கரிப்பர்.கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியைச் ‘சாம்பூநதம்’ என்னும் பொன் தகட்டால் பொதிவர்.
நாட்டினை தன் வெண்கொற்ற குடையின் கீழ் காக்கும் மன்னனின் அரண்மனையிலே அக்கோலை வைத்து,’இந்திரனின் மகன் சயந்தனாக இக்கோல் விளங்குக’,என அதற்க்கு வந்தனை,வழிபாடுகள் முதலியன செய்து போற்றுவர்.அதுவே ‘தலைக்கோல்’ என்பதாகும். .
புண்ணிய நதிகளில் இருந்து பொற்குடங்களால் முகந்து வந்த நல்ல நீரைக் கொண்டு தலைக்கோலை நீராட்டி,மாலை சூட்டி,நன்னாள் ஒன்றில் பொன் ‘பூண்’ மற்றும் பொன் ‘முகபடாம்’ என்னும் அலங்கார துணி பூண்டிருக்கும்,பட்டத்து யானையின் பெரிய துதிக்கையிலே வாழ்த்தொலிகளுடன் அந்த தலைக்கோலை வழங்கினர்.
அந்த யானையை அழைத்துக் கொண்டு வீதி உலா வரும்போது,மூவகை முரசுகள் முழங்கின,பல்வேறு வாத்தியங்கள் ஒலித்தன,அரசனும் அவனுடன் சேர்ந்த ஐம்பெரும் குழுவினரும் அதனுடன் வீதிவலம் வந்தனர்.யானை தேர்வீதியை சுற்றி வந்த பின் தன் கையிலிருந்த தலைக்கோலை கவிஞனிடம் அளித்தது.அவ்வாறு வந்து சேர்ந்த தலைக்கோலைக் கவிஞன் மாதவியின் நடன அரங்கிலே கொண்டு போய்,அவையோர் அறியுமாறு ஒரு இடத்தில வைத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]