அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

8.அருந்தொழில் அரங்கம்
(மாதவி நடனம் ஆடப்போகும் அரங்கம் பற்றிய வருணனை)
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது | 95 |
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக் கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு நூனெறி மரபின் அரங்கம் அளக்குங் கோலள விருபத்து நால்விர லாக |
100 |
எழுகோ லகலத் தெண்கோல் நீளத் தொருகோல் உயரத் துறுப்பின் தாகி உத்தரப் பலகையோ டரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோ லாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் |
105 |
தோற்றிய அரங்கில் தொழுதன ரேத்தப் பூதரை யெழுதி மேனிலை வைத்துத் தூண்நிழற் புறப்பட மாண்விளக் கெடுத்தாங்கு ஒருமுக எழினியும் பொருமுக எழினியுங் கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு |
110 |
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம் வளையுடன் நாற்றி விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப் |
நாடக நூலோர் சொல்லிய அரங்க அமைப்பு இயல்புகளில் இருந்து சிறிதும் மாறாது,அரங்கம் அமைப்பதற்குத் தகுதியான ஒரு இடத்தை முதலில் தேர்வு செய்தனர்.பொதிய மலை போன்ற உயர்ந்த புண்ணிய மலைகளிலே உயரமாக வளர்ந்த மூங்கில்களிலே,கணுவுக்கு கணு ஒரு சாண் தூரம் உள்ளதாக வளர்ந்திருக்கும் மூங்கில் ஒன்றை வெட்டி வந்தனர்.அதனை,நூல்கள் உரைத்த முறைக்கு ஏற்றவாறு,நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் கைபெருவிரலில் இருபத்தி நான்கு வரும்படி அளந்து ஒரு கோல் நறுக்கினர்.ஏழு கோல் அகலமும்,எட்டுக்கோல் நீளமும்,ஒரு கோல் உயரமுமாக நடன அரங்கம் அமைக்கப்பட்டது.
நாற்புறமும் தூண்களை நிறுத்தி,அவற்றின்மேல் உத்திரப் பலகைகளைப் பொருத்தினர்.உத்திரப் பலகைகளுக்கும் நடனமேடைக்கும் இடையே நான்கு கோல் அகல இடைவெளி இருந்தது.அரங்கத்தின் உள்ளே போவதற்கும் வருவதற்குமாக இரண்டு வாயில்கள் அமைக்கப்பட்டன.அரங்கின் மேல்நிலை மாடத்தில்,யாவரும் தொழுது போற்றுமாறு,நால்வகை வருணபூதங்களின் உருவங்களை எழுதி வைத்தனர்.தூண்களின் நிழல் அரங்கத்தில் விழாதவாறு ஒளிவிடும் நிலை விளக்குகளை வைத்தனர்.
ஒருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட திரையையும் ,இரண்டு பக்கமிருந்தும் நடுவே நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட திரையையும்,மேலிருந்து கீழிறங்கி வரும் திரையையும் பாங்குடன் அமைத்தனர்.அதன்பின்,ஓவிய வேலைப்பாடுகளுடன் மேல்விதானத்தைக் கட்டினர்.புகழ்பெற்ற முத்துமாலை வகைகளான ‘மாலை’,'தாமம்’,'வளை’ மாலைகளை அரங்கம் முழுதும் தொங்கவிட்டனர்.
இவ்வாறு,புதுமையான அரிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பெற்றது மாதவியின் ஆடல் அரங்கம்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]