அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்
7.யாழ் ஆசிரியர்
(மாதவியுடன் வந்த யாழ்ப் புலவரின் சிறப்பு)
ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் | 70 |
ஓரேழ் பாலை நிறுத்தல் வேண்டி வன்மையிற் கிடந்த தார பாகமும் மென்மையிற் கிடந்த குரலின் பாகமும் மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக் கைக்கிளை யொழிந்த பாகமும் பொற்புடைத் |
75 |
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக் கிளைவழிப் பட்டன ளாங்கே கிளையுந் தன்கிளை அழிவுகண் டவள்வயிற் சேர ஏனை மகளிருங் கிளைவழிச் சேர மேலது உழையிளி கீழது கைக்கிளை |
80 |
வம்புறு மரபிற் செம்பாலை யாயது இறுதி யாதி யாக ஆங்கவை பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது படுமலை செவ்வழி பகரரும் பாலையெனக் குரல்குர லாகத் தற்கிழமை திரிந்தபின் |
85 |
முன்னதன் வகையே முறைமையில் திரிந்தாங்கு இளிமுத லாகிய எதிர்படு கிழமையுங் கோடி விளரி மேற்செம் பாலையென நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின் இணைநரம் புடையன அணைவுறக் கொண்டாங்கு |
90 |
யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் குழன்மேற் கோடி வலமுறை மெலிய வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன் |
செம்மையான முறையிலே இரண்டு ஏழாகத் தொடுக்கப்பட்ட ஆயப்பாலை பதிநான்கில்,ஓர் ஏழிசைபாலைகளை மட்டும் நிறுத்திக் காட்டுதல் விரும்பி,
வன்மையாய் நிற்கும் ‘தாரம்’பெற்ற இரண்டலகில் ஓரலகையும்,
மென்மையாக நிற்கும்;’குரல்’ பெற்ற நாலகில் இரண்டலகையும்
கூட்டி தோன்றியது ‘கைக்கிளை’((தாரம்)1+(குரல்)2=3 அலகு), தாரம் எனும் மெய்க்கிளை நரம்பில் இருந்து.
அழகு தளராத தாள நரம்பு,தன்னிடம் எஞ்சியிருந்த ஓர் அலகை அருகில் இருந்த விளரிக்கு தர,’விளரி’ தன் தன்மை மாறித் ‘தத்தம்’ எனும் நரம்பாயிற்று.
அம்முறையே,’குரல்’,'இளி’,'உழை’ முதலான ஏனைய இசை நரம்புகள் தமக்கு ஏற்ற கிளைஞர் இடங்களை சேர்ந்தனர்.செம்முறை மாறிப்போய்,இங்கனம் பதினாற் கோவையானது.உழை முதல் இடத்தில நின்றது,கைக்கிளை இறுதி இடத்தில நின்றது.இப்புதிய கோவைகளாலே செம்பாலை முதலிய புதிய பண்கள் புதியதொரு மரபினிலே தோன்றின யாழிசை மூலமாக.
இறுதியாய் நின்ற கைக்கிளை முதலாக அனைத்து இசைகளும் முறைக்கேற்பத் தத்தமக்குப் பொருந்திய முறையான திரிபுகள் பெற்றுப் பொலிந்தன.
வலமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி,’கைக்கிளை,தத்தம்,குரல்’ ஆகியவை,
கைக்கிளை படுமலைப் பாலையாய்
தத்தம் செவ்வழிப் பாலையாய்
குரல் அரும் பாலையாய்,திரிந்து;
.
இடமுறைப் பாலைத் திரிபின் முறைப்படி,’தாரம்,விளரி,இளி’, ஆகியவை,
தாரம் கோடிப் பாலையாய்
விளரி விளரிப் பாலையாய்
இளி மேற்செம் பாலையாய்த் திரிந்து;
நெடிதாகக் கிடந்த சுரங்களின் இடத்தே,முதலும் இறுதியுமாக கிடந்த நரம்புகளை பொருத்தமுறக் கொண்டு,
அரும்பாலை முதலான இடமுறைப் பாலைகள் மெலிந்து இசைக்கவும்,கோடிப்பாலை முதலான வலமுறைப் பாலைகள் வலிந்து இசைக்கவும்,
வலிவு மெலிவு,சமம் என்னும் மூவகை ஓசைகள் விளங்கவும்,நரம்புகளின் அடைவு சிறிதும் கெடாது,பண்ணீர்மை குன்றாது இனிதாக இசைக்கவல்ல யாழ் இசையசிரியனும் மாதவியுடன் வந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]