அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

6.குழல் ஆசிரியர்
(மாதவிக்கு அமைந்த குழல் ஆசிரியரின் சிறப்பு)
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின் வர்த்தனை நான்கும் மயலறப் பெய்தாங்கு ஏற்றிய குரலிளி என்றிரு நரம்பின் ஒப்பக் கேட்கும் உணர்வின னாகிப் |
60 |
பண்ணமை முழவின் கண்ணெறி யறிந்து தண்ணுமை முதல்வன் தன்னொடும் பொருந்தி வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு இசையோன் பாடிய இசையி னியற்கை வந்தது வளர்த்து வருவது ஒற்றி |
65 |
இன்புற இயக்கி இசைபட வைத்து வார நிலத்தைக் கேடின்று வளர்த்தாங்கு ஈர நிலத்தின் எழுத்தெழுத் தாக வழுவின்று இசைக்குங் குழலோன் றானும் |
நூல்களில் சொல்லிய முறைப்படி,’சித்திரப் புணர்ச்சி’,'வஞ்சனைப் புணர்ச்சி’ என்னும் இருவகைக் கூற்றினையும் அறிந்து இசைப்பவன்;
இசை ஆசிரியருக்கு நிகரான அறிவு திறன் வாய்த்தவன்;
நான்கு வகையான வர்த்தனைகளையும் மயக்கமின்றி இசைத்து,அவ்விடத்தே ஏறிய ‘குரல்’,'இளி’ என்று சொல்லப்படும் இருவகை நரம்பின் இசைக்கும் ஒத்துக் கேட்குமாறு இசைக்கும் திறமையினை உடையவன்;
சிறப்பாய் பொருந்திய பண்ணை சரியாய் அமைத்து,முழவின் இருகண் நெறிகளுடன் தாள இயல்புகளின் திறம் அறிந்து,தண்ணுமை ஆசிரியனுக்கும் தக்கவாறு பொருந்தி இசைக்க வல்லவன்.
இளநரம்பை முதலாவதாக,யாழின்கண் நிரல்படவைத்து,பண்ணில் வரும் சுரங்கள் குறைவுபடாது வளர்த்து,பண்ணுக்குரிய சுரங்கள் தவிர வேற்றுச் சுரங்களின் கலப்பேதுமின்றி அவற்றோடு ஒற்றியிருந்து,இன்புற இயக்கி,இசையின் பண் இலக்கணத்துடன் பொருந்திட வைத்துக் குழல் இசைக்க வல்லவன்;
வாரப்பாடலை அளவு நிரம்ப நிறுத்த வல்லவனாகவும் இருப்பவன்.அவ்விடத்தும் சொல் நீர்மைகளின் எழுத்துக்கள் ஒவ்வொரு எழுத்துமாக வழுவின்றி இசைக்கும் ஆற்றல் உடையவன்;
அத்தகைய தன்மை உடைய ஒருவன் மாதவிக்கு குழல் ஆசிரியனாக அமைந்திருந்தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]