அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

14.கோவலன் மாதவியின் மணை புகுந்தான்
(கண்ணகியின் கணவன் கோவலன் மாதவியின் மேல் காதல் கொண்டதை விவரிக்கும் பகுதி)
-அதுவே நூறுபத் தடுக்கி எட்டுக்கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவதிம் மாலை |
165 |
மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென மானமர் நோக்கியோர் கூனிகைக் கொடுத்து நகர நம்பியர் திரிதரு மறுகிற் பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த மாமலர் நெடுங்கண் மாதவி மாலை |
170 |
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமனை புக்கு மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுத லறியா விருப்பின னாயினன் வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்தென். |
175 |
பத்துப் பத்தாய் அடுக்கிய நூறுடன் எட்டையும் இணைத்த உயர்ந்த சிறப்பு பெற்று பசும்பொன்னால் ஆனது அரசன் மாதவிக்கு பரிசு அளித்த மாலை.இதை அதிகம் பணம் கொண்டு வாங்குபவன் மாதவிக்கு மணமகனாக ஏற்றவன் என்று எண்ணினாள் மாதவியின் தாய் சித்ராபதி.இந்த எண்ணத்துடன் மான் போன்ற மிருட்சியுடைய பார்வையைக் கொண்ட கூனி ஒருத்தி கையில் அம்மாலையை கொடுத்தாள்,நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கும் பெரிய தெருவிலே அம்மாலையை விற்பவள் போல கூனி நின்றாள்.
பெரிய தாமரை போன்ற நெடிய கண்களையுடைய மாதவியின் அந்த மாலையை கோவலன் வாங்கி,கூனியுடன் மாதவியின் மணைக்கு சென்றான்.மாதவியுடன் கட்டி தழுவி மகிழ்ந்து மயங்கினான்.அவளை ஒருபோதும் நீங்கிட முடியாத பெரும்விருப்பம் உடையவன் ஆனான்.குற்றங்கள் ஏதுமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவே தன் உள்ளத்தில் சிறிதும் இல்லாதவனாய்,தன் வீட்டை,கண்ணகியை அறவே மறந்தான்.
வெண்பா
எண்ணும் எழுத்தும் இயலைந்தும் பண்ணான்கும் பண்ணின்ற கூத்துப் பதினொன்றும்-- மண்ணின்மேற் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கின் வந்து. |
புகார்நகரிலே பொன்னாலாகிய வளை அணிந்த மாதவியானவள்,தலைஅரங்கிலே வந்து,
எண்ணும்,எழுத்தும்,இயல்ஐந்தும்,பண்நான்கும்,பண்ணுக்கிசைந்த பதினொரு வகையான கூத்தும்,
உலகம் முழுதும் உள்ளோரெல்லாம் புகழ்ந்து பேசும்படியாக,ஆடியும் பாடியும் காட்டி,அதனால் உலகு போற்றும் சிறப்பும் பெற்றாள்.
அரங்கேற்று காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]