மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்
4.கண்ணகி நலம் பாராட்டல்
(கோவலன்,தன் மனைவி கண்ணகியின் நலனை பாராட்டும் பகுதி)
குழவித் திங்கள் இமையவ ரேத்த அழகொடு முடித்த அருமைத் தாயினும் உரிதின் நின்னோ டுடன்பிறப் புண்மையிற் |
40 |
பெரியோன் தருக திருநுத லாகென அடையார் முனையகத் தமர்மேம் படுநர்க்குப் படைவழங் குவதோர் பண்புண் டாகலின் உருவி லாளன் ஒருபெருங் கருப்புவில் இருகரும் புருவ மாக வீக்க |
45 |
மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலில் தேவர் கோமான் தெய்வக் காவற படைநினக் களிக்கவத னிடைநினக் கிடையென அறுமுக ஒருவனோர் பெறுமுறை யின்றியும் இறுமுறை காணும் இயல்பினின் அன்றே |
50 |
அஞ்சுடர் நெடுவே லொன்றுநின் முகத்துச் செங்கடை மழைக்கண் இரண்டா வீத்தது |
இளம்பிறை நிலவானது,தேவர்களும் போற்றும் சிவபெருமானின் சடைமேல் முடித்த பெருமையினை உடையது.ஆனால் அது,திருமகளான உன்னுடன் பாற்கடலில் பிறந்த உடன்பிறப்பல்லவா!அதனால் தான்,அது உனக்கே உரியது என இறைவன்,அதனை உன் நெற்றியாகத் தந்தானோ?
போர்க்களத்தில் தம்மை எதிர்க்கும் பகைவர்க்கு,படைகலங்கள் வழங்கிப் போர் புரிய சொல்லும் ஒரு முறை உண்டு.அதைப்போலவே மன்மதன் தானும் தம் கரும்புவில்லை,உன் இரு புருவங்களாகத் தந்தானோ?
தேவருண்ணும் மருந்தாகிய அமிழ்தத்திற்கு முன்னே பிறந்த இலக்குமி நீ என்பதால்,தேவர் கோமான் இந்திரன் தன் கைக்கொண்ட வச்சிரப்படையை உன் இடையாகத் தந்தானோ?
ஆறுமுகம் கொண்ட ஒப்பற்ற முருகன் என்னுடன் போர் புரியும் ஒரு முறையும் இல்லாதவன்.அப்படி இருந்தும்,உன்னை கண்டு நான் துன்புற வேண்டும் என,தன் அழகிய சுடரையுடைய நெடிய வேலை,உன் கடை சிவந்த குளிர்ச்சி பொருந்திய இரு கண்களாகத் தந்தானோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]