தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள்
"இதுதான் வீதி நாடகத்தில் வீதியின் சூழலில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய கூறு!"
அதற்காக வீதி நாடகமும் மோடி வித்தையும் ஒன்று என அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. வீதி நாடகத்தில் எது சேர்க்கப்பட்டாலும் அது வீதிநாடகத்தின் விஷயமாக மாறி விடுகிறது.
வீதி நாடகத்தின் இத்தகைய தன்மைகளை அதனுடைய எல்லைகளைப் புரிந்துகொண்டு அதிலே செயலாற்றுவதற்கு நாடகக் கலைஞர்கள், ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
வீதி நாடகத்திலே செயல்படுபவர்கூட இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்டால்தான் வீதி நாடகத்தை வீரியத்தோடு கையாள முடியும்.
அதோடு இன்று தமிழ் நாடகச் சூழலில் நாம் விழிப்புடன் கவனிக்க வேண்டிய வேறு பல அம்சங்களும் உள்ளன.
இன்று பெரும்பாலான மக்களுக்கு நாடகம் பார்க்கிற வழக்கம் இல்லை. அவர்கள் நுகர்கிற நாடகங்கள் எல்லாம் தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள்தாம்.
கிராமப்புறங்களிலோ நமது நாட்டுப்புறக் கலை வடிவங்கள் தங்களது பிடிப்பை இழந்து வருகின்றன.
கிராமத்துத் திருவிழாக்கள் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகளில் இடம்பெற்று வந்த நாட்டுப்புறக் கலை வடிவங்களின் இடத்தை வீடியோ பெட்டிகள் ஆக்கிரமிப்பு செய்துவருகின்றன.
நமது நாடகக் கலையும் நமது பாரம்பரியமான 'நிகழ்த்து கலை'களும் அழிந்து வருகின்றன என்று இதற்கு பொருளாகாது.
எந்த ஒரு கலை வடிவமும் அது உயிர் வாழுவதற்கான சமூகக் காரணங்கள் உள்ளவரை உயிர் வாழும். ஒரு கலை வடிவம் நிலைத்திருப்பதற்கான காரணங்கள் இல்லாதபோது அருங்காட்சியகத்தில் வைப்பதைத் தவிர வேறு எத்தகைய பிரயத்தனங்களாலும் அதனை நிலைபெறச் செய்ய இயலாது.
சினிமா, தொலைக்காட்சி, வீடியோ இவற்றால் நமது "நிகழ்த்து கலைகள்" அழிந்து வருகின்றன என்று விஷயத்தைப் புரிந்து கொள்வது பயனளிக்காது.
இதனை யாரும் மறுக்க இயலாது. ஆனால் சிலர், இத்தகைய நவீன பொழுதுபோக்கு, தொடர்பு சாதனங்கள்தாம் நாடகக் கலையின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக உள்ளது என்று விளக்கமளிக்க முன் வருகின்றனர்; நம்புகின்றனர். இதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால் நாடகக் கலையின் தேக்கத்திற்கான முழுமுதற் காரணமாக இவற்றை அவர்கள் அர்த்தப்படுத்தும்போதுதான் விபரீதமாகி விடுகிறது. உண்மையில் இது நுனிப்புல் மேய்கிற விஷயம் என்பது மட்டுமல்ல; தவறான புரிதலும்கூட.
மக்களுக்குக் கலை வடிவங்களில், பொழுதுபோக்கு அம்சங்களில் ' புதுமை' (Novelty) தேவைப்படுகிறது. இந்தத் 'தேவை'களினால்தான் மின்சாரமே கால் வைக்காத கிராமங்களில்கூட வீடியோ பெட்டிகள் ஊடுருவி விடுகின்றன.
உண்மையில் இந்த நவீன சாதனங்கள் மக்களின் தேவையினைப் பூர்த்திசெய்துவிடுவது இல்லை. 'புதுமைக்'கான தேவைகளைப் பூர்த்தி செய்யாதது மட்டுமின்றி மக்களது உணர்வுகளை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மழுங்கடிக்கச் செய்கின்றன. அவர்களை ஒருவித 'லாகிரி'யில் ஆழ்த்திவிடுகின்றன.
இந்தத் திருப்பணிகள் நடந்தேறுவதற்குக் காரணம் அந்தச் சாதனத்தின் குறைபாடா, இல்லை சரக்கின் குறைபாடா? என்பது பற்றியும் நமக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும்.
மற்றொரு முக்கியமான விஷயமும் இந்தச் சூழலில் விளைகிறது.
கோவில் திருவிழாக்கள், கிராமப்புறத்துச் சிறுதெய்வ வழிபாடுகள் இவற்றின் உடைக்க முடியாத சடங்காசாரத் தளைகளையெல்லாம் இவை உடைத்தெறிந்து ஊடுருவி விடுகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
அதோடு இத்தகைய பாரம்பரியமான கலை வடிவங்களை மக்கள் 'தங்களுடையது' என்று பெருமிதம் கொண்டிருந்தாலும் தங்களது பின் தங்கிய நிலைமையின் ஒரு பகுதியாகத்தான் அவற்றை இனம் காண்கின்றனர் என்பதையும் மறந்துவிட முடியாது.
மக்களது 'புதுமை' தேடலுக்கு ஈடுகொடுக்குமளவிற்கு நமது நாட்டுப்புறக் கலைகள் வளர்த்தெடுக்கப்படவில்லை. இவற்றை வளர்த்தெடுக்க முன் வந்தவர்கள் எல்லாம் இக்கலைகளை நகர்ப்புறத்துப் படிப்பாளி மக்களின் கலையாக மாற்றிவிட முயலுகின்றனர். ஓரிரு சிறு முயற்சிகள் விதிவிலக்காக இருக்கலாம். இருந்தும் பெரும்பாலான நமது 'மரபைப் பேணும்' கலை முயற்சிகள் அனைத்தும் கிராமப்புறத்தினரை, சாதாரண மக்களை அடையும் நோக்குடன் செய்யப்படவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள், வீதி, நாடகக், நமது, கலைகள், நாடகத்தின், தேவை, இல்லை, வேண்டும், இத்தகைய, தமிழில், நாட்டுப்புறக், வீடியோ, வருகின்றன, நாம், இவற்றை, கட்டுரைகள், சூழலில், கலைக், உயிர், முயற்சிகள், என்பதையும், பொழுதுபோக்கு, நவீன, இயலாது, குறைபாடா, காரணங்கள், முன், இந்தத், அழிந்து, மக்களின், ஊடுருவி, புதுமை, என்பது, விடுகின்றன, மக்களது, உண்மையில், கலையின், தங்களது, வேண்டிய, விடுகிறது, அதோடு, நாடகத்தில், சினிமா, drama, arts, நாடகம், இன்று, வேறு, சிறு, பெட்டிகள், பாரம்பரியமான, திருவிழாக்கள், தொலைக்காட்சி, பெரும்பாலான, எல்லாம், நிகழ்த்து