தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
'கொங்கைத் தீ' நாடகத் தொடக்கத்தில் 'இந்தியச் சமுதாய வாழ்வில் பெண்ணால், சீதையாகவோ, பாஞ்சாலியாகவோ, கண்ணகியாகவோ, மாதவியாகவோ இருப்பதினின்றும் தப்பிக்க முடியாது' என்று இந்திரா பார்த்தசாரதி நம்பிக்கையின்மையையே வெளிப்படுத்துகிறார். மாறாக, ராமானுஜத்திடம் தன்னம்பிக்கை வளர்ப்பு தெரிகிறது. பூமிப் பரப்பின் புழுதியை எழுப்பிய போர்கள் அத்தனையிலும் பெண்களைப் பாலியல் வதைக்கு ஆளாக்குதல் வெற்றிப்படையின் ஒரு நியதியாகும் அவலம், ராமானுஜத்தின் டிராய் நகரப் பெண்கள் (The Trojen Women) நாடகத்தின் தமிழ்த் தழுவலாகிய வெறியாட்டத்தில் வெளிப்படுகிறது. போரென்றாலே பொன்னும் பெண்ணும் சூறையாடப்படல் என்பதான குரூர மரபைச் சந்திக்கும் பெருந்தேவி, தன் குடும்பத்துப் பெண்கள் அனைவரும் பகைவரின் பாலுறவு வன்முறைக்குப் பலியாகும் சூழலில், குடும்பத்தின் ஒரே வாரிசான பேரக்குழந்தையைப் பகைவர் வேல் கொண்டு குத்தும் சூழலில்-
"பேடி மகன்கள் நீங்கள்!
பெரியதொரு கோழை நீங்கள்
வாருங்கள் பெண்டுகளே!
வரும் விதியை எதிர்கொள்வோம்
வலுவேதும் உள்ளவரை
விதியையும் எதிர்த்து நிற்போம்"
என்கிறாள். ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகளுள் எதனாலும் மாற்ற முடியாத, போர்க்காலப் பெண்கள் வதையிலிருந்து புறப்படும் பெருந்தேவியின் இந்த நம்பிக்கைக்குரல், யூரிபிடிசின் ஹெகூபாவின் குரலைவிடவும் வலுவானது.
மு. ராமசாமியின் துர்க்கிர அவலமும் (சோபாக்ளீசின் ஆன்டிகனி-தழுவல்) பெண்ணிய நோக்கில் குறிப்பிடத்தக்கது. மண்மகள் அறியா வண்ணச்சீறடியோடு கூண்டுப் பெண்ணாய் வாழ்ந்த கண்ணகி, ஒரு பேரரசனையே எதிர்க்கத் துணிந்த மனவலிமை பெற்றது பற்றித் தமிழ் இலக்கியம் கூறும். இதே போல் சோபாக்ளீசின் ஆன்டிகனி, பேரரசனையே எதிர்த்துப் போராடுகிறாள். இக்கதை தமிழ் வடிவம் பெறும்பொழுது யாமினி (ஆன்டிகனி) வழியே, மென்மைக்குள் புதைந்து கிடக்கும் வன்மையின் எழுச்சி தெரிகிறது. பெருந்தேவியும் யாமினியும் சமூகப் புரட்சிக்காக அரசை எதிர்க்கவில்லை. ஆயின் சமூகப் புரட்சிக்காகவும் எழக்கூடிய பெண்ணின் அடையாளங்கள் இவர்கள். தந்தைவழிச் சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவத்தில் பெண்ணை மென்மையாக உருவாக்கி வைத்தல் இங்கே உடைகிறது. வன்மையும் மென்மையும் சமூகம் ஆக்கியவையே தவிர, ஆண் பெண்களின் இயல்புணர்ச்சிகளல்ல என்பது உணர்த்தப்படுகிறது. "நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப்போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளும்திறன் உண்டென்பதை ஆண்மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்" என்ற பெரியாரின் கூற்று இங்கே நினைக்கத்தக்கது.
ஞாநியின் 'பலூனில்' விமர்சனத்துக்குள்ளாவது நீதித்துறைதான் என்றாலும், இருமைச் சமக்கோட்பாடு, உஷா என்ற பெண் பாத்திர வடிவில் பலவிடங்களில் பேசப்படுகிறது. சமூக அக்கறையுடன் அநீதிக்கு எதிராக ஊர்வலம் போவதிலும், ஆணுக்கு இணையாகச் சிறைதண்டனை பெறுவதிலும் உஷா சமநிலை எடுக்கிறாள், சமநிலை கேட்கிறாள். ஞாநியின் நாடகத்தில் குடும்பக் கூட்டின் எல்லை தாண்டி வந்து சமூகப் பிரச்சினையில் பங்கு கொள்ளும் உஷா 'பெண்ணுக்கும் மூளை இருக்கிறது' என்பதை உணர்த்துகிறாள்.
அம்பையின் நாடகத்தில் (பயங்கள்) ஆணுக்கும் பெண்ணுக்கும் பயங்கள் பொதுவாக இருப்பதாகச் சொல்லப்படுவது வித்தியாசமானது. இந்த நாடகத்தில் அம்பை, ஓர் ஆணின் பாதுகாப்பிலிருந்து பெண்ணை விடுவிக்க நினைக்கவில்லை, இந்தப் பயன் யதார்த்தமானது என்றாலும் பெண்ணிய நோக்கில் கேள்விக்குரியதாகிறது. பயன்படுத்தியபின், பெண்ணை ஒதுக்கும் ஆடவனுக்காகக் 'கற்புநிலை' காக்காது, மற்றொரு தேடலுக்காகப் போகும் நம்பிக்கை நன்றாக அமைந்திருக்கிறது. மரபுமீறல், மென்மை, மாமியாரிடம் எழும் மரபுப் பொறாமை எல்லாம் கலந்தவளாக அஞ்சலி இருக்கிறாள். தாலி, குடும்ப இறுக்கம், உடைமைப் பண்பு இவையெல்லாம் கூட இந்நாடகத்தில் இருக்கின்றன. ஆயின் பெண்ணுக்குப் பாலுணர்வை விடவும் நட்பு மேலானது என்பதாக ஒரு கருத்தமைப்பைப் பெண்ணிய நோக்கில் இவரால் வைக்க முடிந்திருக்கிறது. கற்புநிலை உடைவதும், ஆணும் பெண்ணும் பரஸ்பர நட்புக் கொள்வதும், இந்நாடகத்தில் கவனிக்கத் தக்கவை. தீவிரப் பெண்ணிய வாதிகளின் 'குழந்தை வேண்டாத சிந்தனை'யும் இந்நாடகத் கருத்துக்களில் ஒன்றாகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், பெண்ணிய, நோக்கில், சமூகப், பெண்ணை, நாடகத்தில், பெண்ணுக்கும், பெண்கள், ஆன்டிகனி, நாடகங்களும், கலைக், நவீன, நாடகக், கட்டுரைகள், பெண்ணியமும், பெண், என்றாலும், கற்புநிலை, இந்நாடகத்தில், பயங்கள், சமநிலை, என்பது, ஞாநியின், ஆயின், சூழலில், பெண்ணும், arts, தெரிகிறது, நீங்கள், சோபாக்ளீசின், கலைகள், பேரரசனையே, drama, இங்கே