தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இக்கட்டுரையில், பெண்களின் வாழ்க்கைச் சிக்கலைக்கூறும் தமிழ் நாடகங்களும், தமிழகச் சூழலுக்கேற்ப உருவான தழுவல் நாடகங்களும் மட்டும் விளக்கப்படுகின்றன. மொழியாக்க நாடகங்கள் இடம் பெறவில்லை. தெரிவு செய்யப்பட்ட நவீன நாடகங்கள் அனைத்தும் நிகழ்கலை உத்திகளுடன் எழுதப் பட்டிருப்பதால் இவை நடிக்கப்படுவதற்காகவே எழுதப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. இந்நாடகங்களின் கருத்துநிலைகளில் பெண்ணிய சிந்தனை மிகுதியுமில்லை என்பது கட்டுரையின் கருதுகோள்.
இந்த நூற்றாண்டுத் தமிழ் நாடக வளர்ச்சியின் தொடக்கத்திலேயே பெண்ணிய சிந்தனையின் முகிழ்ப்பைக் காண முடிகிறது. ஜான் லாக், மான்டெங்கு, வால்டேர், ஹ’யூம், மெக்காலே போன்ற மேலைநாட்டு அறிஞர்கள், 'பெண்நிலை' பற்றித் தொடங்கிய சிந்தனை உலகெங்கும் பரவியது இதற்கான காரணமாகலாம். சமூகத்தின் இறுக்கமான பல கட்டுக்களின் நெகிழ்ச்சியை எழுத்தில் வடித்தவர்களாகிய புதுமைப் பித்தன், கு.பா.ரா., பாரதி, பாரதிதாசன் ஆகியோர் பெண்ணுரிமை பற்றிச் சிந்தித்தவர்கள். சிறுகதையையும் கவிதையையும் எழுத்துத் தளங்களாகக் கொண்டிருந்த இவர்களை நாடகாசிரியர்கள் என்று கூறமுடியாது போனாலும், நாடக ஆசையின் காரணமாக இவர்கள் எழுதிய மிகச் சில நாடகங்களையே இன்றைய நாடக மரபின் தொடக்கமாகக் கொள்ள நேர்கிறது.
"பெண்களுக்கு சுய பிரக்ஞை அவசியம் வேண்டும்" (அகலியை) என்ற கு.பா.ராவின் குரலே இன்றைய பெண் நிலைவாதச் சிந்தனைவாதிகளின் பெருங்குரலாக ஒலிக்கிறது. "இல்லற மகிழ்வுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் பரஸ்பர மரியாதை மிகவும் அவசியம்" என்றும், "குடும்பத்திற்குள் ஆண் பெண் இருவருடைய மனப்பான்மையும் தனியாக வளர்ந்து ஆராய்ச்சியினால் ஒன்றுபட வேண்டும். அப்பொழுது தான் பரஸ்பர மரியாதை, ஹ’தம் இவைகள் ஏற்படும்" என்றும் கூறும் கு.பா. ராவின் கருத்துக்களில் காணப்படும் சமத்துவம், தனித்துவம், ஆராய்ச்சிப் போக்கு, ஹ’தம் இவையெல்லாம் குடும்ப வாழ்வில் புரிபடப்படும் பொழுது, குடும்ப நிறுவனங்களுக்குள் எழும் பல பிரச்சினைகளும் சீராக வழியுண்டு. கு.பா.ராவின் மற்றொரு நாடகத்தில் (பெண் இருதயம்) 'தாய் கோட்பாடு' உடைகிறது. காதலனே தனக்குத் தேவையானவன் என்று சகுந்தலை பகிரங்கமாகப் பேசுகிறாள். தாய் மகள், மோதல் உளவியல் அடிப்படையில் எழுகிறது. புதுமைப் பித்தன் நாடகங்களில் (வாக்கும் வக்கும்) இந்தப் பிரச்சாரத் தொனியில்லை. ஆனால் பெண்ணை நாடாள வைத்தல், பெண்ணுக்கு ஆண் பணிகள் செய்தல் என்பதான மரபு விலகல் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார். பாரதியின் வள்ளி, கந்தன் கயிறுகள் உல்லாசமாகக் காற்று வெளியில் சல்லாபம் செய்கின்றன. ஆண் பெண் உறவைக் கொச்சையானது (Taboo) என்பதாக மக்கள் பாவனை செய்து கொண்டிருந்த காலத்தில் காதல் இயல்பானது என்று பாரதி, கயிறுகளின் தழுவல், காதல்மொழி இவற்றால் நிறுவுகிறார். பாரதிதாசனின் வீரத்தாய் நாடகம், பெண்ணைத் தாழ்வாக மதிக்கும் சமூக மதிப்பீட்டுக்கும், உயர்வாக மதிக்கும் சமூக மதிப்பீட்டுக்கும் நடைபெறும் விவாதத்துடனேயே தொடங்குகிறது. மாறுவேடம் புனைந்து நாட்டையே காப்பாற்றிய விஜயராணியைப் பார்த்துப் பிறர்-
"அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும்படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்
போகுநாள் இன்பப் புதிய நாள்"
என்று பாராட்டும் பொழுது, "பெண்ணுயர்வும்" "பெண் திறனும்" பேசுவது பாரதிதாசனின் குறிக்கோள் என்பது புலப்படுகிறது. பெண்ணின் 'மீட்பு' சிந்திக்கப்பட்டது. கற்புக் கோட்பாட்டை ஒரு வலுவான கோடாரியாகக் கொண்டு, இந்திய நாடெங்கும் பெண்ணைக் காலம் காலமாக வதைத்துக் கொண்டிருக்கும் பண்பாட்டுச் சீரழிவு உணர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியை விதவை மணம், பொருந்தா மணப் புறக்கணிப்பு, கலப்பு மணம் ஆகிய கருத்து விரிவுகளாக அண்ணாவின் நாடகங்களில் காணமுடிகிறது. சோ, பரத்தமையின் அவலம் உணர்த்தினார். அறந்தை நாராயணனின் "மூர்மார்க்கெட்" இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கது. 1975-ல் வெளிவந்த இந்நாடகத்தில் ஆதரவற்ற ஏழை சரோஜா, சமூக அமைப்பின் இழிவைச் சரியாகப் புரிந்து கொண்ட மனவளர்ச்சியுடன், தன்னையொத்த ஏழை ஆண்களிடையே விபச்சாரத் தொழிலை, மனநெருடலின்றி நட்பு ரீதியாக நடத்திக் கொண்டு, ஏழ்மைத் துயரிலிருந்து மீளாமல் வாழ்வது காட்டப்படுகிறது. பரத்தையர் என்ற சமூக உருவாக்கக் கேடும், பரத்தையரின் மன அவலங்களும் இலக்கியப் பொருளாகத் தொடங்கிய காலத்தில், ஆண்களுக்கு அறிவுரை கூறுபவளாக, ஆறுதல் கூறுபவளாக, மேட்டுக் குடியினரை எதிர்க்கும் துணிவுடையவளாக சரோஜா உருவாக்கப்பட்டிருக்கிறாள்.
சமூக அளவில் மாற்றங்கள் செய்ய நினைத்த இந்நாடக மரபினர்க்கு குடும்பம் என்ற நிறுவனத்தின் இறுக்கம் பற்றி எந்த ஐயமுமில்லை. சமூகத்தின் இந்த அடிப்படை அலகு வலுவாகவும் அமைதியாகவும் விளங்க வேண்டும் என்ற அதி உன்னதக் கனவு இவர்களுக்கு இருந்தது. திருமணமே வாழ்க்கைப்பயன் என்பதை, அதன் சடங்குகளோடு ஒத்துக்கொண்டிருந்தால், திருமணம் இல்லாத பெண்களுக்கான இவர்களின் பரிவே, விதவைமணம், குழந்தை மணஎதிர்ப்பு, பொருந்தாமண எதிப்பு, கலப்புமண ஆதரவு, பரத்தமை எதிர்ப்பு-என்பதான விரிவுகளாக அமைந்தது. மேலை நாடுகளின் ஆரம்பகால எழுத்தாளர்களைப் போலவே, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவே இவர்கள் எழுதினார்கள். பெண்களின் 'அறிவு நுட்பம்' பற்றிய பார்வை இவர்களிடம் அதிகம் இல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், பெண், தமிழ், சமூக, நாடகங்களும், நவீன, என்பது, பெண்ணியமும், நாடக, வேண்டும், பெண்களின், நாடகக், கலைக், கட்டுரைகள், ராவின், பொழுது, தாய், என்றும், நாடகங்களில், ஹ’தம், குடும்ப, மதிக்கும், மணம், விரிவுகளாக, சரோஜா, கூறுபவளாக, கொண்டு, மதிப்பீட்டுக்கும், காலத்தில், பாரதிதாசனின், மரியாதை, என்பதான, இவர்கள், தழுவல், நாடகங்கள், பெண்ணிய, நாடகம், கலைகள், drama, arts, சிந்தனை, தொடங்கிய, கொண்டிருந்த, இன்றைய, அவசியம், பாரதி, பித்தன், சமூகத்தின், புதுமைப், பரஸ்பர