தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும்
- டாக்டர். செண்பகம் ராமசாமி
மானுடம் தொடர்பான எந்தவொரு வாழ்க்கைக் கோட்பாட்டையும் திட்டவட்டமான இலக்கண விதிகளால் விளக்குவது அரிது. 19-ஆம் நூற்றாண்டிலிருந்து உலகளாவிய சிந்தனையாக மலர்ந்திருக்கும் பெண்ணியக் கோட்பாடும் அத்தகையதே. 'மேலோட்டப் புரிவும், ஆழ்நிலையில் சிக்கலும் உடைய ஒரு கோட்பாடுதான் இதுவும்.
உயிர் வளர்ச்சியின் அடிப்படைத் தேவையான ஆண்-பெண் இணைப்பு, ஆணாகவும் பெண்ணாகவும் பிரிந்து இயங்கும் சமூகச் சூழலில், சமூக வரலாறும் பண்பாடும், காலச் சூழலுக்கேற்ப, சமூகத்தின் பல்வேறு தளங்களுக்கேற்ப, ஆணுக்கும் பெண்ணுக்கும் தகுதி வேறுபாட்டை நிர்ணயித்துவரும் வரலாற்றைத் தெளிவாக அறிந்து, இத்தகுதி வேறுபாட்டைக் களைந்து, இயற்கையின் ஆதிநிலையான இருமைச் சமம் என்ற விழிப்புணர்வை உலகெங்கும் உணர்த்த முற்படுவது பெண்ணியம்-என்னும் விளக்கத்தை இக்கட்டுரைக்காக அமைத்துக் கொள்ளலாம்.
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இயக்க ரீதியில் உருவான இச்சிந்தனை, உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதைத் தமிழ்ச் சமுதாயப் போக்கும் இன்று உணர்த்திக் கொண்டிருக்கிறது. மேரிஹேஸ், மேரிவுல்ஸ்டோன் கிராப்ட், சிமொன் திபூவா, பெட்டி ப்ரீடன், டெய்லர், ஜிலா ஐன்ஸ்டீன், ராபின் மார்கன், ஜுலியட் மிச்சல் போன்ற மேலை நாட்டுப் பெண்ணியவாதிகளையோ; பூலே, பெரியார் போன்ற இந்தியப் பெண்ணியவாதிகளையோ பற்றி எதுவும் அறியாத ஆனால் கல்வி வாய்ப்பும் பொருளாதார மேம்பாடும் சமூகப் பணிகளில் பங்கேற்பும் உள்ள பெண்கள் தாமாகவே பெண் நிலை பற்றிச் சிந்திக்கும் சூழலுடையதாகச் சமூகம் உருவாகி வருகிறது.
பெண்நிலை வாதம் ஓர் அறிவார்த்தக் கோட்பாடு என்ற அங்கீகாரம் பெற்று விட்டதால் பல நிறுவனங்களும் இச்சிந்தனையோடு இயைவதன் வழியே உலகத்தோடு ஒட்ட ஒழுகும் அறிவமைப்புக்களாகச் செயல்பட முன் வருகின்றன. இக்கொள்கைப் பரப்பல் அரசுக்கு ஒரு கடமையாக ஆகியிருக்கிறது. கல்விச் சிந்தனையில் இது இணைகிறது. சமூகவியல் என்றொரு கல்வித்துறையின் தகுதியை உணர்ந்த செய்திப் பத்திரிகைகளும், பிற வார, மாத இதழ்களும், சமூக அக்கறையின் வெளிப்பாடாக வரதட்சணைச் சாவு, பெண் சிசு கொலை, கற்பழிப்பு, ஆதிவாசிப் பெண்களின் வாழ்வுச் சேதம் போன்றவற்றை விளக்கப்படங்களுடன் நீண்ட கட்டுரைகளாகவும், பேட்டிகளாகவும், கதைகளாகவும் வெளியிட்டு வருகின்றன. பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்ச்சி ஏனைய ஊடகங்களான திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி, இவற்றிலும் பிரதிபலிக்கிறது. இச்சூழலில், பெண்ணியக் கருத்துக்களைத் தமிழின் நவீன நாடகம் எந்த அளவில் உள்வாங்கியிருக்கிறது என்பது கேள்வி.
தமிழில் நவீன நாடகம் என்பது எது? நாடகமே தமிழில் இல்லை எனவும், தெருக்கூத்தின் தொல்மரபாக நாடகம் இருந்தது எனவும் விவாதம் தொடரும் இன்றைய தமிழ்க்கல்வி வட்டத்தில் நவீன நாடகம், ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கலையாயிருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து எழுத்திலக்கியமாகக் கிடைத்துவரும் நாடக மரபின் தொடர்ச்சியில், மரபு மாற்றமாக நவீன நாடகங்கள் அமைகின்றன. இவை வெளிநாட்டார் விளக்கியிருக்கும் பல்வேறு இலக்கிய, உளவியல், அறிவியல் கோட்பாடுகளையும், ஓரளவு இந்தியத் தொல்மரபையும் இணைத்துக் கொண்டு நாடகாசிரியரின், இயக்குநரின் கற்பனைத் திறனுக்கேற்ற பல்வேறு நாடக உத்திகளையும், கருத்து நிலைகளையும் கொண்டு விளங்குகின்றன.
நாடகம் கருத்து வெளிப்பாட்டின் பல்வேறு நிலைகளையும், பல்வேறு தொனிகளிலும் பார்வையாளர்களுடன் நேரடியாக வெளிப்படுத்தும் பிரச்சார ஆற்றல் கொண்டது. தொனி, பெரும்பாலும் தோல்வியடையாத கலைவடிவம் நடிக்கப்படும் நாடகமாகும். ஆயின் நடிக்கப்படும் நாடகத்தை ஆய்வு செய்வதற்கு, நாடகத்தைப் 'பலமுறை பார்த்தல்' அனுபவத்துடன் ஒலி ஒளி நாடாப்பதிவுகளின் துணையும் தேவை என்பதால், அச்சில் வெளிவந்த நாடகங்கள் மட்டும் கட்டுரைக்காகத் தெரிவு செய்யப்படுகின்றன. சிறுகதை, புதினப் படைப்பாளர்கள் அளவு, நவீன நாடகாசிரியரின் எண்ணிக்கை இல்லை என்பது ஒரு கணிப்பு. கதை இலக்கியம் மக்களைக் கவர்வது அளவு, நாடகத்தின் எழுத்து வடிவால் மக்களைப் பிடிக்க முடிவதில்லை. இலக்கிய அம்சம் மிகுந்ததாகக் கருதப்படும் நாடகங்களும் (மனோன்மணியம், சாகுந்தலம், ராஜராஜசோழன்) பாடப் புத்தகங்களாகவே கௌரவம் பெறுகின்றன. இந்தப் பின்னனியில் தமிழில் நாடகங்கள் குறைவாக இருப்பதும், வெகுஜன ரசனையிலிருந்து விலகும் நவீன நாடகங்கள், அதிலும் அச்சில் வந்தவை இன்னும் குறைவாக இருப்பதும் கருத்தில் கொள்ளத் தக்கவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நவீன, நாடகம், பல்வேறு, நாடகங்களும், தமிழ், பெண்ணியமும், நாடகங்கள், பெண், என்பது, கட்டுரைகள், நாடகக், கலைக், தமிழில், நாடக, இலக்கிய, கொண்டு, நடிக்கப்படும், அளவு, குறைவாக, இருப்பதும், அச்சில், எனவும், கருத்து, நிலைகளையும், நாடகாசிரியரின், பெண்ணியம், திரைப்படம், தொடர்பான, கலைகள், arts, drama, நூற்றாண்டிலிருந்து, பெண்ணியக், வருகின்றன, பெண்ணியவாதிகளையோ, வருகிறது, சமூக, இல்லை