ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இந்தக் கிராமியமான சம்பாஷணைகள் பாமரர் பேசிக்கொள்ளும் முறையிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது போக, "துளிர்த்து" என்பதைத் "துளுத்து," என்றும், "இரவில்" என்பதை "ராவில்" என்றும், "பூக்கள்" என்பதைப் "பூவுகள்" என்றும், "வைத்து" என்பதை "வெச்சு" என்றும் பேச்சு வழக்கை ஒட்டியே இவர் பாட்டில் கையாளுவார். இப்படிக் கையாண்ட இடங்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. இன்னும், "ஏன் காணும் நீர் வரவில்லை?" என்று நாம் சகஜமாகக் கேட்பது போல் சுக்ரீவனைப் பார்த்து இலக்குவன் ஓரிடத்தில் கேட்கிறான். சீதையும் இராமனைப் பார்த்து, "ஆம் காணும்" என்று ஓரிடத்தில் கூறுகிறாள்.
இப்படி நாட்டு மக்கள் நாவில் வழங்கும் தமிழை, அந்த அழகோடும், அந்தச் சுவையோடும், அந்த மணத்தோடும் கையாண்டு ஒரு பெரிய நாடகம் முழுவதையும் இயற்றியிருக்கிறார். இதைப் பாமரத் தமிழ், கொச்சைத் தமிழ் என்று பழிக்கும் நோக்கத்துடன் யாரேனும் சொன்னால், அவர்களுக்குத் தமிழின் சுவையே தெரியாது என்றுதான் கருத வேண்டும். பேச்சு நடைதான் எந்த மொழிக்கும் அசல் நடை; மூல நடை. எழுத்து நடை என்பது சௌகரியத்திற்காக உண்டு பண்ணிக்கொள்ளப்பட்ட நடையே. நாடகமாகப் பாடுவதற்குரிய பாடல்கள் பேச்சு நடையில் அமைந்திருந்தால், நாடகக் காட்சிகளைத் தத்ரூபமாக ரசிகர்களின் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்த முடியும் என்பதைத் தெரிந்தே இந்த மேதாவி இப்படிப்பட்ட நடையைக் கையாண்டிருக்கிறார். இந்தக் காரியத்தைப் பள்ளு ஆசிரியர்களும் குறவஞ்சி ஆசிரியர்களும் இவருக்கு முன்பே செய்திருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் கையாண்ட பேச்சுத் தமிழில் ஏட்டுத் தமிழ் வாசம் இருக்கும்; அந்தப் பாமரத் தமிழில் புலமைத்
தமிழின் வாடை வீசும். ஆனால் அருணாசலக் கவிராயர் கையாண்ட தமிழோ முழுக்க முழுக்கப் பேச்சுத் தமிழாக அல்லது பேச்சுத் தமிழின் மணம் வீசுவதாக இருக்கிறது. அவருடைய சாதனை இணையற்ற சாதனை. இதில் அவர் அடைந்த வெற்றியில் பாதியோ கால்வாசியோகூட வேறு எந்தப் புலவரும் அடைந்ததில்லை என்று துணிந்து கூறலாம்.
அருணாசலக் கவிராயர் தம்முடைய பாடல்களில் நூற்றுக் கணக்கான பழமொழிகளையும் பயன்படுத்தியிருக்கிறார். அதிலும், அவர் பயன்படுத்தியுள்ள முறை வியக்கத் தக்கதாக இருக்கிறது. ஒரு பழமொழியைப் போட்டால் அநேகமாக அங்கே அபாரமான நகைச்சுவை இருக்கும். பல இடங்களில் உரக்கச் சிரிக்கும்படியும் செய்துவிடுவார். கைகேயியைப் பழிக்கும் தசரதன்.
"கீரைக்குப் புல்லுருவி
கீழே முளைத்தாற்போலே
கெடுகாலி எங்கே வந்தாள்?"
என்று கேட்பதும்,
குகனிடத்தில் பேசும் ராமன், "ஆனை ஏறியும் திட்டி வாசலில் நுழைவானேன்?" என்று கேட்பதும்,
மாய மானைப் பார்த்த இலக்குவன்,
"கூத்துப் பார்க்கப்போன
இடத்தில் பேய்பிடித்தாற்போல்
குலையுதென்மனம் தானே"
என்று சொல்வதும்,
"ஆனை கெட்டவன்
குடத்தில் தேடினாற்போல்"
என்று சடாயு சொல்வதும்,
"பதறிஅழும் நோயாளி
முகத்தின் முன்னே
பரிகாரி தலைமாட்டில்
அழுகின் றாற்போல்"
என்று ராவணனின் பாட்டன் மாலியவான் சொல்வதும்,
"எலி வேட்டைக்குத் தவில் அடியா?" என்று மகோதரன் கேட்பதும், இன்னும் இவை போன்று பழமொழிகளோடு கூடிய நூற்றுக்கணக்கான பகுதிகளும் மிகுந்த நகைச்சுவை கொண்டவை. அந்தந்தப் பகுதியை முழுமையாகப் படிக்கும்போது தான் அதில் உள்ள நகைச்சுவையை நன்கு அனுபவிக்க முடியும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
கவிராயர் மற்றொரு காரியமும் செய்திருக்கிறார். ராமனின் பாதுகையைப் பரதன் கேட்டான் என்பதை நாம் அறிவோம். "பாதுகை" என்ற சொல்லை மட்டுமே இந்தக் கட்டத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் கவிராயரோ, 'அண்ணன் மிதியடி கொண்டான்" என்று கூறுயிருக்கிறார். சீதையைக் குகனுக்கு அறிமுகப்படுத்தும் போது ராமன், 'இவள் உன்கொழுந்தி' என்று கூறியிருக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள், ", நாடகம், நாடகக், என்றும், என்பதை, கையாண்ட, தமிழ், தமிழின், பேச்சுத், கவிராயர், பேச்சு, கட்டுரைகள், கலைக், சொல்வதும், கேட்பதும், இந்தக், தமிழில், அவர், இருக்கும், ஆசிரியர்களும், ராமன், இருக்கிறது, நகைச்சுவை, அருணாசலக், சாதனை, ஓரிடத்தில், என்பதைத், நூற்றுக், கலைகள், arts, drama, இன்னும், நாம், பாமரத், பழிக்கும், அந்த, இலக்குவன், பார்த்து, முடியும்