எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்
பெரும்பாலும் பாடசாலை நாடகப் போட்டிகளிலும், விழாக்களிலும், சில வேளைகளில் அருந்தலாகப் பெருமுயற்சியுடன் தனிப்பட்ட ரீதியிலும் நாட்டிய நாடகம் என்ற மகுடத்துடன் மேடையிடப்படும் மேடை நிகழ்வுகளைக் கண்ணுற்றபோது அவற்றுட் பெரும்பாலானவை ஒரே தன்மையானவையாக அமைந்து, சலிப்பையே தந்தன. இவற்றை வேறு வகையாகவும் செய்யலாகாதா? என்று நான் சிந்தனை செய்ததுண்டு. பிரபல்யம் பெற்ற நாட்டிய நாடகப் பெரியவர்களை அணுகி, என் அபிலாசையைக் கூறியபோது மரபு அப்படித்தான் அதை மாற்றுதல் கூடாது என்று மறுத்து விட்டார்கள். பலருக்குப் புதுமை காணும் ஆவல் இருந்தும், அப்படிச் செய்ய நேரின் சமூகத்தின் பெரு மட்டங்களில் தமக்கு அங்கீகாரம் கிடைக்காது போய்விடும் எனக்கூறி ஒதுங்கியும் விட்டனர்.
தமது பாடசாலைகளில் நாட்டிய நாடகங்களை மேடையிட வேண்டும் என யாழ்ப்பாணத்தின் பிரபலமிக்க மகளிர் கல்லூரிகள் என்னை நாடியபோது, என் மனதுள் நெருப்பாகக் கனிந்து கிடந்த அபிலாசைகளை ஜுவாலையாக வெளிப்படுத்தும் வாய்ப்புச் சித்தித்தது. அப்பாடசாலைகளின் நடன ஆசிரியைகளின் ஒத்துழைப்பும் எனக்குக் கிடைத்தது.
1986ல் 'சக்தி பிறக்குது' என்ற ஓர் புதிய மேடை நிகழ்வை சர்வதேசப் பெண்கள் நினைவு நாளையொட்டி நான் செய்தபோது அதில் பரதத்தை ஓர் ஆக்க நடனமாக அமைத்துத் தந்து எனக்கு உதவி புரிந்தார் யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடன விரிவுரையாளரான செல்வி. சாந்தா பொன்னுத்துரையவர்கள். அடக்கப்பட்ட பெண்குலத்தின் எழுச்சியை அற்புதமான ஆட்ட அசைவுகளில் அமைத்தார். மரபுகளிற் காலூன்றிப் புதிய மரபுகளைத் தோற்றுவிக்க முன் வந்தார் அவர். அத்தகைய துணிவும், உழைப்பும், சாஸ்திர ரீதியாக நடனம் பயிலும் நம் இளம் தலைமுறையினர் பலர் பெற வேண்டியவை.
புதிது புனைதல் ஆவலில், புதிய எல்லைகளைத் தேடுதல் என்ற உந்துதலில் எழுந்தவையே இந் நாடகங்கள். நாட்டிய நாடகம் என்ற சொல்லைவிட நிருத்திய நாடகம் என்ற சொல் பொருத்தமானது என்பதனால் இந் நாடகங்கள் இரண்டிற்கு அப்பெயரை இட்டுள்ளேன். நாட்டியம் என்பது வட மொழியில் நாடகம் என்ற அர்த்தமே தருவது. எனவே நாட்டிய நாடகம் என்கையில் 'நாடகம் நாடகம்' எனப் பொருள் தருமாதலாலும் நிருத்தியம் மூலம் இந் நாடகம் நிகழ்த்தப்படுவதனாலும் அதனை நிருத்திய நாடகம் என அழைத்தலே பொருத்தமென நினைத்து இப் பெயரை இவற்றிற்கு இங்கு இட்டுள்ளேன். நிருத்திய நாடகங்கள் இரண்டும் பெரும்பாலும் பரதத்தையும், மோடி நாடகம் ஈழத்துத் தமிழரின் தனித்துவமிக்க ஆடல் முறையான கூத்தையும் தமது அடித்தளமாகக் கொண்டவை. இவை அடித்தளமேயொழிய மேற்கட்டுமானத்தில் பல கலவைகள் இணைந்துமுள்ளன.
மேற்குறிப்பிட்ட மூன்று நாடகங்களும் பரிசோதனை முறையில் எழுதப்பட்டுத் தயாரிக்கப்பட்ட நாடகங்களாகும். ஒரு வகையில் இவை பரிசோதனை நாடகங்களே. பரிசோதனைகள் மூலமே புதிய நெறிகளை உருவாக்கலாம். புதிய நெறிகள் சூனியத்தில் உருவாவனவல்ல. இவற்றிற்கு அடித்தளமும் தேவை. நம்மிடம் செழுமையான அடித்தளமுண்டு. ஆனால் புதுமை தேடும் வேட்கைதான் இல்லை. நமது சமூக அமைப்பே காரணம்.
இத்தகைய பரிசோதனை நாடகங்களை நான் நாடகம் என்றழைப்பதைவிட அரங்க நிகழ்வுகள் என்றே குறிப்பிடுவேன். அரங்கு (theatre) என்பதன் அர்த்தம் விசாலமானது. எம்மத்தியில் அரங்கு பற்றிய அறிவு (theatre study) வளராமையும் இப் பரிசோதனை முயற்சிக் குறைவுக்கு ஒரு காரணமாகும்.
பரிசோதனைச் சாலையொன்றினுள் ஒரு விஞ்ஞானி பல இரசாயன மூலகங்களையும் கலந்து புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பது போல நாடகக் கலைஞர்களும் பல்வேறு கற்பனைகளையும் கலந்து புதுப்புது வடிவங்களைக் கண்டுபிடிக்க, ஒரு நாடகப் பரிசோதனைச் சாலை அவசியம். மேற்கு நாடுகளில் சில அரங்கக் குழுக்கள் (Theatre groups) ஆய்வு அறிவு ரீதியாக இதனை ஆற்றுகின்றன. நம் மத்தியில் இதற்கான வாய்ப்பும் குறைவு; புதுமைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற தைரியமும் குறைவு.
மரபுகளினின்று மீற விரும்பாத, மீற முடியாத ஒரு இறுகிப் போன சமூக அமைப்பினுள் நாம் வாழுவதே அதற்கான காரணமாகும்.
எனினும் காலம் என்பது கறங்குபோற் சுழல்வது. அதன் சுழற்சியில் மாற்றமும் தவிர்க்க முடியாதது. இன்று மாற்றத்திற்கான குரல்களைச் சமூகத்தின் பல மட்டங்களிலும் கேட்கிறோம். கலையும் அதற்கு விதிவிலக்கன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகம், நாடகங்கள், நாட்டிய, பரிசோதனை, நாடகக், மூன்று, நான், நாடகப், theatre, நிருத்திய, கலைக், கட்டுரைகள், எனது, இவற்றிற்கு, சமூக, அரங்கு, காரணமாகும், குறைவு, கலந்து, பரிசோதனைச், என்பது, அறிவு, புதுமை, நடனம், கலைகள், arts, drama, பெரும்பாலும், மேடை, ரீதியாக, நாடகங்களை, தமது, சமூகத்தின், இட்டுள்ளேன்